’ஜெயலலிதா தேசிய கீதத்தை அவமதித்து விட்டார்’ - ராமதாஸ்

திங்கள், 25 மே 2015 (16:12 IST)
ஜெயலலிதாவின் அவசரத்துக்காக தேசிய கீதத்தைக்கூட இரு வரிகளுடன் நிறுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்கள். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “புதிய அமைச்சரவை பதவி யேற்கும்போது முதலில் முதல் வரும், அதன்பின் மரபுசீர் வரிசைப் படி அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக பதவியேற்றுக் கொள்வதுதான் வழக்கம்.
 
ஆனால், ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் முதல்வர் பதவியேற்ற பிறகு, மீதமுள்ள 28 அமைச்சர்களும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 14 அமைச்சர்கள் வீதம் மொத்தமாக பதவியேற்றுக் கொண்டிருக்கின்றனர்.
 
இந்தக் காட்சியைப் பார்க்கும் போது பள்ளிக் குழந்தைகள் மொத்தமாக நின்று வாய்ப்பாடு ஒப்பிப்பதைப் போன்று இருந்தது.10 நிமிடங்களில் அமைச்சர்களின் பதவியேற்பு முடிந்துவிட்டது. விதிகளையும் மரபுகளையும் கேலிக்கூத்தாக்குவது கண்டிக்கத்தக்கது.
 
விழா தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால், விழாவில் தேசிய கீதத்தின் முதல் இரு வரிகள் மட்டுமே இசைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் அவசரத்துக்காக தேசிய கீதத்தைக்கூட இரு வரிகளுடன் நிறுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்கள். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும்.
 
முதல்வராக பதவியேற்ற பிறகு அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
 
கடந்த 7 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் அதிகமான புதிய பேருந்துகள், மெட்ரோ ரயில் திட்டம், சென்னை மாநகராட்சி கூடுதல் கட்டிடம் ஆகியவற்றின் தொடக்க விழாக்கள் அடுத்தடுத்த நாட்களில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. காரணமே இல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைக் கூட்டமும் விரைவில் தொடங்கவிருக்கிறது.
 
மக்களுக்காக, மக்களின் வரிப்பணத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எப்போதோ திறப்பு விழாவுக்கு தயாராகிவிட்டாலும், ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக அவை முடக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது இப்போது அம்பலமாகி விட்டது.
 
தமிழகத்துக்கு சேவை செய்யத்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்ற உணர்வுடன் செயல்படு வதற்கு பதிலாக, தனக்கு சேவை செய்வதுதான் தமிழகத்தின் கடமை என்ற மனப்போக்கில் ஜெயலலிதா செயல்படுவது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்