மக்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் பரிசு போக்குவரத்து நெருக்கடிதான் - ட்விட்டரில் குஷ்பு கருத்து

வெள்ளி, 22 மே 2015 (17:45 IST)
ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் முன்பே, பொது மக்களுக்கு கொடுத்த முதல் பரிசு போக்குவரத்து நெரிசல்தான் என குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
 
நாளை காலை 11 மணிக்கு தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று, போயஸ் கார்டன் வீட்டில் இருந்து, கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு சென்று ரோசைய்யாவை சந்தித்து பேசினார். அதன் பிறகு எம்ஜிஆர், அண்ணா, பெரியார் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
 
இந்த விழாவில் கலந்து கொள்ளவும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை காணவும் , தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு அதிமுகவினர் படையெடுத்து வந்தனர். மேலும், நகரத்தின் பல பகுதிகளிலும் டிஜிட்டல் பேனர், தட்டி, போஸ்டர் என அமர்க்களப்படுத்தியிருந்தனர். இதனால், சென்னை நகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்ற பாதைகள் மற்றும் அதிமுகவினர் குவிந்துள்ளதால், நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
 
இந்நிலையில், பிரபல நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது ட்டிவிட்டரில் கூறியுள்ளதாவது:- 
 
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திரும்பிவந்துள்ளார். இதனால், அவர் பதவியேற்கும் முன்பே மக்களுக்கு கிடைத்துள்ள முதல் பரிசு போக்குவரத்து நெருக்கடிதான். ஜெயலலிதாவை குளிர்விக்க, புதிய சாலைகளைகூட மீண்டும் தோண்டி பேனர்கள் வைத்துள்ளனர். நாளை இதைவிட மோசமாக இருக்கலாம் என அதில் கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்