ஜல்லிக்கட்டுக்கு ஜெயலலிதா அவசர சட்டம் பிறப்பிக்க முடியும் - மார்க்கண்டேய கட்ஜூ

புதன், 6 ஜனவரி 2016 (10:01 IST)
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அவசரச் சட்டத்தை, தமிழக அரசே பிறப்பிக்க முடியும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் தனது இணையதளத்திலும், முகநூலிலும் கருத்து வெளியிட்டுள்ள கட்ஜூ, “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும். மேலும் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
அவருக்கு அவரது சட்ட வல்லுநர்கள் தவறான ஆலோசனை தந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கைகள் ஆகியவை மாநில அரசின் பட்டியலின் கீழ்தான் வருகின்றன. அரசியல் சட்டத்தின் 7வது அட்டவணையில் இதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
 
எனவே, இதைப் பயன்படுத்தி தமிழக அரசு, ஆளுநர் மூலமாக அவசரச் சட்டத்தைத் தானே பிறப்பிக்க முடியும். இதற்காக மத்திய அரசைஅணுகத் தேவையே இல்லை. மாநில அரசு இந்த அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கும்போது, மனித உயிர்களுக்கும், விலங்குகளுக்கும் (காளை மாடுகள்) அதீத உயிர் அபாயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற வாசகத்தைச் சேர்த்தால் போதும்.
 
மேலும் ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு, கேளிகை ஆகிய வகையின் கீழ் வரும் என்பதால் இந்த அவசரச் சட்டத்திற்கும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கும் இடையே முரண்பாடுகள் கிடையாது.
 
இந்தக் கருத்தை யாராவது ஜெயலலிதாவிடம் கூற முடியுமா?” என்று கூறியுள்ளார்.
 
இதற்கு முகநூல் பக்கத்தில் ஒருநபர், “இது விலங்குகளை வதைக்கும் செயல் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதற்கு, கட்ஜூ, “நான் மிதமிஞ்சிய கொடுமையை எதிர்க்கிறேன். விலங்குகளுக்குக் கொடுமை என்பது எல்லா இடத்திலும் உள்ளதுதான். உதாரணமாக சிக்கன், மட்டன் சப்பிடுவதற்கு அவற்றை வெட்டுகிறோம்.
 
நாம் தண்ணீரில் இருந்து மீனை வெளியே எடுக்கும்போது, அதனால் சுவாசிக்க முடியவில்லை. இது மீனுக்கு இழைக்கப்படும் கொடுமை இல்லையா?” என்று திருப்பி கேட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்