ஜெயலலிதாவின் 3 அசையா சொத்துக்களை மறுமதிப்பீடு செய்ய நீதிபதி உத்தரவு

வெள்ளி, 6 மார்ச் 2015 (12:08 IST)
கொடைக்கானல், சிறுதாவூர் மற்றும் பையனூரில் ஆகிய இடங்களில் உள்ள ஜெயலலிதாவின் 3 அசையா சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கர்நாடகா தனிநீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
 
ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு மீதான மேல்முறையீட்டு மனுவின் விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி முதல் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
 

 
இதன் தொடர்ச்சியாக 37ஆவது நாளாக நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகி 5ஆவது நாளாக வாதிட்டார். அப்போது ஜெயலலிதாவிடம் இருந்து மற்ற 3 பேருக்கு எவ்வாறு பண பரிமாற்றம் நடைபெற்றது மற்றும் நிலம் வாங்கியது குறித்தும் அவர் விளக்கினார்.
 
அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி, ‘‘நிலம் வாங்கியது, சொத்துகளை வாங்கியதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இவற்றுக்கு ஜெயலலிதாவிடம் இருந்து தான் பண பரிமாற்றம் நடந்தது என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?
மேலும், ஜெயலலிதா உள்பட 4 பேரும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து சொத்துகளை குவித்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கூட்டுச்சதி செய்ததற்கான ஆதாரங்கள் எங்கே? ஜெயராமனுக்கு பணத்தை ஜெயலலிதா கொடுத்ததற்கு ஆதாரங்கள் உள்ளதா? இதில் ஜெயலலிதாவுக்கு என்ன தொடர்பு உள்ளது?’’ என்றார்.
 
அப்போது அரசு வக்கீல் பவானிசிங் வாதிடுகையில், ‘‘நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் நிறுவனத்துக்கு ரூ.14 கோடி சந்தா மூலம் திரட்டப்பட்டதற்கான சரியான ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர்கள் கொடுத்த ஆவணங்களை கீழ்கோர்ட்டு நிராகரித்துவிட்டது’’ என்றார்.
 
அதைத் தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற விசாரணையில் அரசு வக்கீல் பவானிசிங் வாதிடுகையில், ‘‘பையனூர் கட்டிடம் மற்றும் அதற்கு பயன்படுத்திய டைல்ஸ், மார்பிள்ஸ் போன்றவற்றின் செலவு ரூ.5 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது’’ என்றார்.
 
இதற்கு சசிகலா தரப்பு வக்கீல் மணிசங்கர் எதிர்ப்பு தெரிவித்து, ‘‘கொடைக்கானல், சிறுதாவூர் மற்றும் பையனூரில் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு வேண்டும் என்றே தமிழக அரசு என்ஜினீயர்களால் அதிகமாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது’’ என்று ஆட்சேபனை தெரிவித்தார்.
 
உடனே நீதிபதி குமாரசாமி, ‘‘கொடைக்கானல், பையனூர் மற்றும் சிறுவதாவூரில் உள்ள அசையா சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். அதுபற்றிய விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.’’ என்று அரசு வக்கீல் பவானிசிங்கிடம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்