ஜெயலலிதாவும் தான் குற்றவாளி: பிறகு ஏன் கொண்டாடினார்கள் அதிமுக தொண்டர்கள்?

புதன், 15 பிப்ரவரி 2017 (12:29 IST)
தமிழகமே நேற்றைய சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை கொண்டாடியது. அதிலும் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதனை பலரும் விமர்சித்தனர். தங்கள் கட்சியின் தலைவி ஜெயலலிதாவும் தான் குற்றவாளி என கூறப்பட்டுள்ளார். இதனை ஏன் கொண்டாடுகிறார்கள் என்று.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் மக்கள் மத்தியில் சசிகலா மீதான எதிர்ப்பு அதிகமானது. இறந்த சில நாட்களிலேயே கட்சி நிர்வாகிகளை கட்டாயப்படுத்தி விதிமுறைகளை மீறி பொதுச்செயலாளர் ஆனது, முதல்வரையே மிரட்டி ராஜினாமா செய்ய வைத்து தான் முதலமைச்சராக துடித்தது என எதனையும் மக்கள் விரும்பவில்லை.
 
குறிப்பாக அதிமுக தொண்டர்கள் முழுமையாக சசிகலாவை வெறுத்தனர். அனைவரும் ஓர் அணியில் ஓபிஎஸ் பக்கம் நின்றனர். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களை சிறை பிடித்து கூவத்தூர் ரிசார்ட்டில் வைத்திருந்தார். தமிழக அரசியல் சூழலை சின்னபின்னமாக்கினார்.


 
 
அவர் முதல்வராவதை தடுக்கும் முட்டுக்கட்டையாக சொத்துக்குவிப்பு வழக்கு இருந்தது. இதனால் அதிமுக தொண்டர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவரும் நேற்று வெளியாக இருந்த அந்த வழக்கின் தீர்ப்பை உற்று நோக்கிக்கொண்டிருந்தனர்.
 
இதனையடுத்து அதிரடியாக சசிகலா குற்றவாளி எனவும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறித்ததும் ஒட்டு மொத்த தமிழகமும் கொண்டாடியது. அதிலும் அதிமுக தொண்டர்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.


 
 
ஆனால் இந்த வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளியே அவர் இறந்து விட்டதால் அவரை தண்டனையில் இருந்து விடுவிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை வைத்து தீர்ப்பை கொண்டாடிய அதிமுக தொண்டர்கள் விமர்சிக்கப்பட்டனர். தங்களை தலைவி ஜெயலலிதாவை குற்றவாளி என கூறியதை ஏன் இவர்கள் கொண்டாடுகிறார்கள் என விமர்சித்தனர்.
 
இதற்கு அதிமுக தொண்டர்கள் பலர் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதில் அளித்துள்ளனர். அதில் உண்மையான குற்றவாளி சசிகலா தான், சசிகலாவால் தான் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததாக கூறுகின்றனர். மேலும் இது சொத்துக்குவிப்பு வழக்கிற்கு கிடைத்த தண்டனை அல்ல. சொத்து மற்றும் பதவிக்காக திட்டமிட்டு நடந்த கொலைக்கு கிடைத்த நீதிதான் இது என்கிறார்கள்.


 
 
ஜெயலலிதா மரணத்தில் பல அதிமுக தொண்டர்கள் சசிகலா மீதே சந்தேகத்தை எழுப்புகின்றனர். இது ஜெயலலிதாவே சசிகலாவுக்கு அளித்த தண்டனையாக அவர்கள் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் இந்த கொண்டாட்டம் என்கிறார்கள் அதிமுகவினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்