எனக்கு எல்லாமே நீங்கள் தான்: மீண்டும் வாட்ஸ் ஆப்பில் ஜெயலலிதா

திங்கள், 14 மார்ச் 2016 (17:44 IST)
வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதர்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள். அதிலும் சமூக வலைதளங்களை தான் அரசியல் கட்சிகள் அதிகமாக குறிவைத்துள்ளது.


 
 
முகநூல், டுவிட்டர், வாட்ஸ் ஆப் ஆகியவற்றின் மூலம் தேர்தல் பிரசார யுக்திகளை உபயோகித்து வருகிறார்கள் அரசியல் கட்சியினர் அதிலும் குறிப்பாக வாட்ஸ் ஆப் மூலம் வாக்காளர்களை கவருவதற்காக ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
 
கடந்த மழை வெள்ளத்தின் போது வாட்ஸ் ஆப் மூலம் முதல்வர் ஜெயலலிதா உருக்கமான உரையாற்றினார். தற்போது மீண்டும் வாட்ஸ் ஆப் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர் அதிமுகவினர்.
 
அதிமுகவினர் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ள ஒரு தேர்தல் பரப்புரை வீடியோவில் 1 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் எம்.ஜி.ஆர்., முதல்வர் ஜெயலலிதா படங்களுடன் பின்னணியில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் புரட்சிகர பாடல்களும் ஒலிக்கின்றன.
 
இந்த வீடியோவின் இறுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் உரை இடம்பெறுகிறது. அந்த உரையில், எனக்கு எல்லாமே நீங்கள் தான், உங்களால் தான் நான், உங்களுக்காகவே நான். எனக்கு தன்னலம் கிடையாது, எல்லாமே உங்கள் நலம் தான், தமிழ்நாட்டின் நலம் தான், தமிழக மக்களின் நலம் தான். தமிழக மக்கள் தான் என் மக்கள் என்று பேசுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்