இதுபற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை : ஜெயலலிதா ஆவேசம்

செவ்வாய், 21 ஜூன் 2016 (08:18 IST)
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு திமுகதான் என்றும், இன்று மீனவர்கள் படும் அத்தனை துயரங்களுக்கும் திமுகவே காரணம் என்றும் சட்டசபையில் ஜெயலலிதா கூறினார்.


 

 
நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக உறுப்பினர் பொன்முடி “ 1991 ஆம் ஆண்டில் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்டுத் தருவேன் என்று கூறினார். ஆனால் இதுவரை அதை செய்யவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
 
அதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஜெயலலிதா “1974, 1976 ஆம் ஆண்டுகளில் அப்போதைய மத்திய அரசு, கட்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கான ஒப்பந்தங்களை செய்துகொண்டிருக்கும்போது கருணாநிதிதான் முதலமைச்சராக இருந்தார். அப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து என்ன போராட்டம் நடத்தினார்?
 
கச்சத்தீவை மீட்பேன் என்று நான் கூறினேன். ஆனால், மாநில அரசின் அதிகார வரம்பு எதுவரை உள்ளது என்பதை அறிந்து, மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் கூறினேனே தவிர, ஒரு படையை திரட்டிக்கொண்டு கச்சத்தீவை மீட்பேன் என்று கூறவில்லை.
 
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கும், இன்று மீனவர்கள் படும் அத்தனை துயரத்திற்கும் திமுகவும், அன்றைய முதல்வர் கருணாநிதியுமே காரணம். எத்தனை கூச்சல் போட்டாலும் இதை மறைக்க முடியாது.  
 
அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, இத்தனை வருடம் தூங்கிவிட்டு இப்போது என்னைப் பார்த்து கேள்வி கேட்பதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது” என்று காட்டமாக ஜெயலலிதா பேசினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்