’ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெறலாம் என்று பகல் கனவு காண்கிறார்’ - விஜயகாந்த்

திங்கள், 25 மே 2015 (16:56 IST)
ஜெயலலிதா வெற்று அறிவிப்பின் மூலம் ஏமாற்றி மீண்டும் வெற்றி பெறலாம் என்று பகல் கனவு காண்கிறார் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊழலுக்கான தண்டனையால் இரண்டாவது முறையாக பதவி இழந்த ஜெயலலிதா, நீதியை எதிர்பார்க்கும் எல்லோருக்கும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக, தமிழகமே எதிர்பாராத வகையில் வந்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மீண்டும் தமிழக முதலைமைச்சராக பொறுப்பேற்றதும், அறிவித்த அறிவிப்புகளை பார்த்தால் "பத்தோடு பதினொன்னு அத்தோடு இதுவும் ஒன்னு" என்கின்ற கிராமப்புற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
 
ஏனென்றால் சட்டசபையில் இவர் 2011ல் பதவி ஏற்ற நாள் முதல் விதி 110-ன் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவிப்புகளை அறிவித்திருந்தார். அவற்றில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் எதுவுமே முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை.
 
இந்த சூழலில் தற்போது ஐந்து புதிய திட்டங்களுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார் என்ற செய்தியை படிக்கின்ற பொழுது யாரை ஏமாற்றுவதற்கு இது போன்ற அறிவிப்புகளை இவர் வெளியிடுகிறார் என்று சாமான்ய மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
 
இவர் 2011 ஆம் ஆண்டு பதவி ஏற்ற பொழுது ஒரு கிலோ பருப்பு என்ன விலைக்கு விற்றதோ, ஏறத்தாழ அந்த விலைக்கு இன்று அரைக்கிலோ பருப்பை விற்க முன்வந்திருப்பது விலைவாசியை கட்டுக்குள் வைக்கமுடியாத இந்த அரசின் கையாலாகாத்தனமே தவிர வேறென்ன என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.
 
மேலும் இந்த ஆட்சியில் மனசாட்சியுள்ள அரசாங்க ஊழியர்கள் தங்கள் துறைகளில் நடக்கின்ற ஊழல்களை பற்றி தகவல் தந்தால், ஊழல் செய்பவர்களை விட்டு விட்டு, ஊழலுக்கு அங்கீகாரம் அளிப்பதுபோல் தகவல் தந்தவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது, இந்த அதிமுக ஆட்சி அலங்கோலத்தின் உச்சமாகும்.
 
பொதுவாக ஒருவர் எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது. ஆனால் அதிகார மமதையில் இது புரியாத ஜெயலலிதா தமிழக மக்களை வெற்று அறிவிப்பின் மூலம் ஏமாற்றி, மீண்டும் வெற்றி பெறலாம் என்று பகல் கனவு காண்கிறார்.
 
ஆனால் தமிழக மக்களோ "ஏமாற்றாதே ஏமாறாதே" என்று ஜெயலலிதாவிற்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்