வேலு நாச்சியார் நினைவு மண்டபம் & குயிலி நினைவுச் சின்னம் - ஜெயலலிதா திறந்து வைத்தார்

சனி, 19 ஜூலை 2014 (17:50 IST)
சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் ஆகியவற்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 18.7.2014 அன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார் 
 
நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை கௌரவிக்கும் வகையிலும், வருங்கால சந்ததியினர் அவர்களின் தியாகங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு உருவாக்கி பராமரித்து வருகிறது. 
 
இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி வெற்றி கண்ட முதல் பெண்மணியும், தன்னிகரற்ற வீரத்தால் தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவரும், சிவகங்கை சீமையை ஆட்சி செய்தவருமான ராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவாக சிவகங்கையில் நினைவு மண்டபம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்கள். அதன்படி, சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். 
 
அதேபோன்று, வீரமங்கை வேலு நாச்சியாரின் மெய்க்காவலராய் விளங்கி வெள்ளையர்களை அழித்து தன் உயிரையும் தியாகம் செய்த வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், வீர மங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படவிருக்கும் வளாகத்திலேயே வீரத்தாய் குயிலி அவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா 15.5.2013 அன்று சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார். 
 
அதன்படி, சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டப வளாகத்தில் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 
இதனைத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்