பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

ஞாயிறு, 31 ஜனவரி 2016 (20:27 IST)
பெட்ரோல் டீசலுக்கான் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டு விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார்.


 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைந்து வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரிகளை உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
 
பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு 1 ரூபாய் வீதமும், டீசலுக்கான கலால் வரியை 1 ரூபாய் 50 காசுகள் என்ற வீதமும் தற்போது மத்திய அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது ஆகும் என்றார்.
 
இந்த மாதம் மட்டும் பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 12 காசுகள் வீதமும், டீசலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் 50 காசுகள் வீதமும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இது வரை பெட்ரோலுக்கான கலால் வரியை 11 ரூபாய் 77 காசுகள் என்ற அளவிலும், டீசலுக்கான கலால் வரியை 13 ரூபாய் 57 காசுகள் என்ற அளவிலும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
 
மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் இது போன்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்துவது நியாயமானது அல்ல.
 
கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைப்பதன் மூலம் இவை மிகக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை ஏற்படும். அதன் மூலம் பொருளாதாரம் மலர்ச்சி அடையும். எனவே, மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்தை விடுத்து, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி என்ற நீண்ட கால கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்த கலால் வரி உயர்வுகளை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்