ஜெ வழக்கு: திமுக க.அன்பழகன் மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (17:17 IST)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக் கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஜெயலலிதா சொத்து வழக்கு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
 
சிறப்பு நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜரான பவானிசிங்கே அப்பீல் விசாரணையிலும் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு பதில் வேறு வழக்கறிஞரை நியமிக்க கோரியும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அப்பீல் விசாரணையில் தன்னையும் வாதியாக சேர்க்க வேண்டும் என்றும், அதுவரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
 
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து ஏற்றுக் கொண்டு, இன்று விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். இதுபற்றி ஜெயலலிதா வழக்கறிஞர் பாலிநாரிமனுக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் க.அன்பழகனின் மனு உச்சநீதிமன்றத்தின் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
 
நீதிபதிகள் யூ.யூ.லலித், மதன் பி.லோகூர் ஆகியோர் கொண்ட அமர்வில் மன்றத்தில் இருந்து, நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.கோயல் ஆகியோர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்