இடி மின்னல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துகு ஒரு லட்சம் அறிவிப்பு

ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (18:13 IST)
சமீபத்தில் பெய்த மழையின் போது இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
 
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வேலூர் மாவட்டம், சென்னாகுப்பம் கொல்லைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் மகன் ராதாகிருஷ்ணன், அரியலூர் வட்டம், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி கோவிந்தம்மாள்,நாகப்பட்டினம் மாவட்டம், சிறுதலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ் ஆகியோர் இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர்.
 
பழனி நகர மத்திய பேருந்து நிலைய அம்மா உணவகத்தில் மின்கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியிலிருந்த அனாதை செட்டி மடத்தைச் சேர்ந்த காவேரி, மகேஸ்வரி, வீரமணி, காஞ்சனா ஆகியோர் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர் என்ற செய்தியை அறிந்து நான் வருத்தம் அடைந்தேன்.
 
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர மத்திய பேருந்து நிலைய அம்மா உணவகத்தில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்