பழிச்சொல் கண்டு கலங்கவில்லை : அமைச்சர் ஜெயக்குமார்

வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (14:04 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்த விவகாரத்தில் திமுகவின் பழிச்சொல்லை கண்டு கலங்கப்போவதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தவுடன் அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்ய ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். இதுபற்றி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். 
 
ஆனால், அதை ஏற்க மறுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டசிக்கல்களை காரணம் காட்டி கிண்டி காமராஜர் நினைவிடத்தில் இடம் ஒதுக்குவதாக அறிவித்தது. எனவே, திமுக தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இறுதியில் திமுகவிற்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியானது.
இந்த விவகாரம் பற்றி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முரசொலி நாளிதழில் தமிழக அரசின் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மெரினாவில் புதிய நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக ஐந்து வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த சட்டச் சிக்கல்கள்தான் அண்ணா சதுக்கத்தில் இடம் தர முடியாமல் போய், காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. இதில் ஏது காழ்ப்பு உணர்ச்சி? ஜெயலலிதாவின் நினைவிடத்தை மெரினாவில் இருந்து அகற்றுவோம் எனவும், அவரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்றுவோம் எனவும் மேடைபோட்டுப் பேசிய தி.மு.க-வினருக்கு மனசாட்சி இருக்கிறதா?. குத்திக்காட்ட வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. 
 
முதல்வராக இருந்த காமராஜர், ஜானகி ஆகியோர் மறைந்தபோது, அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கேட்கப்பட்டது. வழக்குகள் ஏதும் இல்லாத அப்போதைய காலகட்டத்திலே, முதல்வராக இருந்து மரணமடைவோருக்குத்தான் மெரினாவில் இடம் அளிக்கப்படும் என கருணாநிதி கூறியதை இப்போது நினைவுபடுத்துகிறேன். 
 
எங்கள்மீது குற்றம் சாட்டும் தி.மு.க-வுக்கு, அ.தி.மு.க அரசின் களங்கமில்லா வெள்ளை மனம் புரியவே புரியாது. ஆனால், தமிழக மக்கள் இதைப் புரிந்துகொள்வார்கள். இதற்கெல்லாம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உட்பட நாங்கள் கலங்கப்போவதுமில்லை, கடமை தவறப்போதுமில்லை" என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்