ரஜினியின் சந்தர்ப்ப அரசியல் எடுபடாது : ஜெயக்குமார் பேட்டி

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (12:10 IST)
நடிகர் ரஜினிகாந்தின் சந்தர்ப்ப அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி அதிமுக அரசுக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்தார்.
 
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன். பழையவராக இருந்தாலும், புதியவராக இருந்தாலும், கருணாநிதி இல்லாமல் யாராலும் அரசியல் செய்ய முடியாது.
 
அதிமுக ஆண்டு விழாவின்போது எம்ஜிஆர் படத்தை கருணாநிதியின் படத்தின் அருகே வைக்க வேண்டும், ஏனென்றால் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. அவருடைய இறுதி சடங்கிற்கு ஒட்டுமொத்த இந்தியாவே வந்திருந்தபோது தமிழக முதல்வர் வரவேண்டாமா?” என ஆவேசமாக பேசினார்.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “பகுதி நேர அரசியல்வாதியாக இருந்த ரஜினி தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாற முயற்சி செய்கிறார். ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல் அவர் பேசியுள்ளார். அதாவது, திமுக தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக அவர் பேசியுள்ளார். அவரின் சந்தர்ப்ப அரசியல் இங்கு எடுபடாது. 
 
மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார். அதற்காக அதிமுக தொண்டர்கள் சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். 5 வழக்குகள் நிலுவையில் இருந்ததால்தான் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது எனக் கூறினோம்.  அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றில்லாமல் கருணாநிதிக்கு காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கினோம்.  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லாத நிலையில் ரஜினி பேசுவதை சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது” என அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்