ரமலான் விழாவுக்கு தமிழக அரசு நோன்புக் கஞ்சி அரிசி வழங்கவில்லை: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

வியாழன், 18 ஜூன் 2015 (00:02 IST)
முஸ்லீம் மக்களின் புனித நோன்பான, ரமலான் விழாவுக்கு, தமிழக அரசு நோன்புக் கஞ்சி அரிசி வழங்கவில்லை என  ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து, திருவாரூரில், மனிதநேய மக்கள் கட்சி சட்டப் பேரவைக் குழுத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
முஸ்லீம்களின் புனித நோன்பு ரமலான் நோன்பு. இந்த நோன்பு  இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இதுவரை தமிழக அரசு நோன்புக் கஞ்சி அரிசி வழங்கவில்லை. நோன்புக் கஞ்சிக்கு வழங்கும் அரிசியின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
டெல்டா விவசாயிகள் பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் இருந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கக் கூட மத்திய அரசு தயக்கம் காட்டிவருகிறது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும்.
 
பல நூறு கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லலித்மோடிக்கு பாஜக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தார் என்பது ஊழலுக்கு ஆதரவாக உள்ளது என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்