ஜல்லிக்கட்டு: தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரலாம்!

புதன், 13 ஜனவரி 2016 (17:19 IST)
ஜல்லிக்கட்டுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


 
 
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தனி அவசர சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
 
ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்கள் மீதான விசாரணையிலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
 
உச்சநீதிமன்ற தடை, மத்திய அரசால் அவசர சட்டம் பிறப்பிக்க முடியாத நிலை என ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் எரிமலை போல் மக்கள் மத்தியில் அனலாய் கொதிக்கிறது.
 
சட்ட விதிகளின் படி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் கூறியுள்ள நிலையில். தமிழக மக்களின் அடுத்த எதிர்பார்ப்பு தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதே.
 
ஜல்லிகட்டு விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு சட்ட விதிகள் உரிமை அளிக்கும் போது ஏன் தமிழக அரசு தாமதிக்கிறது. மக்களின் உணர்வுகளை புரிந்து மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தை சுமுகமாக முடித்தால் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்