ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: சரத்குமார்

வியாழன், 31 டிசம்பர் 2015 (10:20 IST)
பொங்கல் பரிசாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் எங்கும் அரசியல் பாகுபாடின்றி முன் வைக்கப்பட்டு வருகிறது.
 
மத்திய மந்திரிகளும் ஜல்லிக்கட்டு வரும் ஆண்டில் கட்டாயம் நடக்கும் என்றே கூறி வருகிறார்கள். அவர்கள் சொல்லி வருவது வெறும் பேச்சாக இல்லாமல் நிஜத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.
 
இந்த நம்பிக்கையில் தமிழகத்தில் பல்வேறு ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.
 
அவர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றமானதாகிவிடக் கூடாது என்ற வகையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
எனவே பிரதமர் மோடி உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழர்களுக்குப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி அளிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்