தடையை மீறி ஜல்லிக்கட்டு - மதுரையில் பரபரப்பு

வெள்ளி, 13 ஜனவரி 2017 (10:32 IST)
உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி மதுரையில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. அது தொடர்பான வழக்கில், பொங்கலுக்கு முன் தீர்ப்பை கூற முடியாது உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என தமிழக அரசியல்வாதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பேரணிகளும் நடைபெற்றன. 
 
மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பேரணிகளை நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் மதுரை மாவட்டம் கரிசல்குளம் பகுதில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட காளை அங்கு கொண்டுவரப்பட்டன. மாடு பிடி வீரர்களும் அங்கு வந்து  மாடுகளை பிடித்தனர். 
 
இது கேள்விபட்டு போலீசார் விரைந்து வந்து, நீதிமன்ற தீர்ப்பை மீறி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என எச்சரித்தனர். ஆனால், அங்கிருந்தவர்கள் ஏற்கவில்லை. இது எங்கள் கலாச்சாரம், இவை எங்களின் மாடுகள். நாங்கள் நடத்துவோம். நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து சில உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவய் துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்