தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக பெய்யக்கூடிய தென்மேற்கு பருவ மழை ஜீன் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடும் வெயில் காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு குறைந்த நேரத்தில் அதிக மழை கொட்டியது. இதனால் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களில் மேலும் 2 நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.