சேகர் ரெட்டி நண்பர்கள் வீட்டில் சோதனை - முக்கிய ஆவனங்கள் சிக்கியது

சனி, 24 டிசம்பர் 2016 (17:47 IST)
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் ஆகியோர் நடத்திய சோதனையை தொடர்ந்து சேகர் ரெட்டியின் நண்பர்கள் வீட்டிலும் இன்று சோதனை நடத்தப்பட்டது.


 

 
சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 131 கோடி பணம், 177 கிலோ தங்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். 
 
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த போது அவர் தமிழகத்தில் பல முக்கிய உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளார் என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் பின் அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அதில்தான், அவருக்கும் ராம் மோகன் ராவுக்கும் இடையே இருந்த தொடர்பு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அதன் பின்னர்தான் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
 
அதைத் தொடர்ந்து, சேகர் ரெட்டிக்கு நெருக்கமாக இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மணல் வியாபாரி ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த மணல் வியாபாரி ரத்தினம் ஆகியோரிடம் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
அவர்களின் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில், அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
 
சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போவதால் தமிழ்நாட்டின் பல முக்கிய புள்ளிகள் கலக்கத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்