பழிச்சொல் வராமல் இருக்க ஜெயலலிதா, எங்கள் பரிந்துரையை ஏற்பது நல்லது : தமிழருவி மணியன்

புதன், 25 நவம்பர் 2015 (18:07 IST)
வெள்ள நிவாரண நிதியை ஆளும் கட்சி பயன்படுத்தப்படுகிறது என்கிற பழிச்சொல் வராமல் இருக்க வேண்டுமானால் ஜெயலலிதா, எங்கள் பரிந்துரையை ஏற்று நடப்பது நல்லது என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி மற்றும் சென்னை மாவட்டங்களில் கடும் மழையினால் பெருமளவு சேதங்கள் நிகழ்ந்துள்ளன.
 
இந்த வெள்ளச் சேதங்களிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை விடுவிப்பதற்கும், அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கும் தமிழக அரசு உறக்கத்திலிருந்து களைந்து தாமதமாகச் செயற்பட்டாலும் அது குறித்து விமர்சனங்களை வைப்பதில் எந்த நன்மையும் வாய்க்கப்போவதில்லை.
 
இயற்கைப் பேரிடர் தந்திருக்கும் மோசமான இன்னல்களிலிருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு மத்திய அரசு தற்போது முதற்கட்டமாக வழங்கியிருக்கும் 900 கோடி ரூபாய் எந்த வகையிலும் போதுமானதில்லை.
 
மத்திய அரசின் நிபுணர்குழு மிக விரைவாக வந்து வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு அறிக்கை வழங்க வேண்டும். தமிழக அரசு எதிர்பார்ப்பது போல் குறைந்தது 8000 கோடி ரூபாயாவது எவ்விதத் தயக்கமுமின்றி மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். 
 
மத்திய அரசின் நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாகச் சென்று சேர்வதுதான் மிக முக்கியம். அதற்கு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் அரசியல் சார்பற்ற நேர்மையான சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் கண்காணிப்பின் கீழ் நிவாரணப் பணிகளும் நிதி உதவியும் வழங்கப்பட வேண்டும்.
 
வெள்ள நிவாரண நிதி ஆளும் கட்சியின் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது என்கிற பழிச்சொல் வராமல் இருக்க வேண்டுமானால் முதல்வர் ஜெயலலிதா, காந்திய மக்கள் இயக்கத்தின் இந்தப் பரிந்துரையை ஏற்று நடப்பது நல்லது’’ என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்