எவ்வளவு பெரிய கேவலம்? - மதுக்கடை மூடல் குறித்து அன்புமணி சாடல்

திங்கள், 20 ஜூன் 2016 (15:13 IST)
அழுகிய காய்கறிகளை அள்ளி வீசிவிட்டு, அவற்றை தானம் கொடுத்து விட்டதாக கடையின் உரிமையாளர் கணக்கு காட்டினால் அது எவ்வளவு கேவலமானதாக இருக்குமோ, அதைப் போன்றது மதுக்கடைகள் மூடப்பட்டதும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


 
 
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்குடன் முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டுள்ளன. விற்பனை மிகவும் குறைவாக இருந்த கடைகள் மட்டுமே மூடப்பட்டிருப்பதால், தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இந்த நடவடிக்கை எந்த வகையிலும் உதவாது; மாறாக, மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே உதவும்.
 
தமிழக முதலமைச்சராக கடந்த மாதம் 23ஆம் தேதி பதவியேற்ற ஜெயலலிதா, முதல் நாளிலேயே மதுக்கடைகளின் விற்பனை நேரம் தினமும் 2 மணி நேரம் குறைக்கப்படும்; தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
 
மதுவிற்பனை நேரக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், 500 மதுக்கடைகளை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. முதல்வர் ஜெயலலிதாவால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு 500 மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் பயனாகவே இப்போது 500 கடைகள் மூடப்பட்டுள்ளன.
 
படிப்படியாக மதுவிலக்கு என அறிவித்த தமிழக அரசு, அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் சிறிதளவாவது பயன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், மதுக்கடைகளின் மதுவிற்பனை நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டதாக இருந்தாலும், 500 மதுக்கடைகள் மூடப்பட்டதாக இருந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை என்பது தான் உண்மை.
 
வழக்கமாக படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் போது சர்ச்சைக்குரிய கடைகள் தான் முதலில் மூடப்படும். அதன்படி, அதிகளவில் மது விற்பனையாகும் கடைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள கடைகள் தான் முதலில் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதோ மது விற்பனை குறைவாக உள்ள கடைகள் மட்டும் தான் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்த மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
 
டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை கடந்த ஆண்டு பெருமளவில் குறைந்தது. இதற்கான காரணங்கள், மதுவிற்பனையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் SWOT (Strengths, Weaknesses Opportunities, Threats) பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் மிகவும் பலவீனமானவை என்று அடையாளம் காணப்பட்ட மதுக்கடைகள் மட்டும் தான் மூடப்பட்டிருக்கின்றன.
 
உதாரணமாக சென்னை மாநகரில் சுமார் 600 மதுக்கடைகள் உள்ள நிலையில், அவற்றில் ஒரு விழுக்காடு அதாவது 7 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிக அளவில் மது விற்பனையாகும் மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு மதுக்கடை மட்டுமே மூடப்பட்டிருக்கிறது. 264 மதுக்கடைகளைக் கொண்ட சேலம் மாவட்டத்தில் ஒரு கடை கூட மூடப்படவில்லை. அதேநேரத்தில் 187 மதுக்கடைகளைக் கொண்ட சிவகங்கை மாவட்டத்தில் 43 கடைகள் அதாவது 25% கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 181 கடைகளில் 36 கடைகள், அதாவது 20% மூடப்பட்டிருக்கின்றன.
 
எங்கெல்லாம் அதிக அளவில் மது விற்பனை நடக்கிறதோ அங்கெல்லாம் மதுக்கடைகள் மூடப்படவில்லை. அதேபோல், எந்தெந்த கடைகளில் விற்பனை குறைவாக நடந்ததோ, அக்கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. அழுகிய காய்கறிகளை அள்ளி வீசிவிட்டு, அவற்றை தானம் கொடுத்து விட்டதாக கடையின் உரிமையாளர் கணக்கு காட்டினால் அது எவ்வளவு கேவலமானதாக இருக்குமோ, அதைப் போன்றது தான் இதுவும்.
 
லாபம் தரும் கடைகளை மட்டும் வைத்துக் கொண்டு, இழப்பை ஏற்படுத்தும் கடைகளை மூடினால் அதற்குப் பெயர் வணிக தந்திரமே தவிர, படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் செயல் அல்ல என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது.
 
கடந்த காலங்களில் பள்ளிக்கூடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் அருகில் உள்ள ஏராளமான மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு கட்டங்களில் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இவற்றை அகற்றுவது தான் உண்மையாகவே படிப்படியான மதுவிலக்குக்கு வகை செய்யும்.
 
ஆனால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு அக்கறை இல்லை என்பதால் பெயரளவில் 500 கடைகளை மூடியிருக்கிறது. இதனால் மதுவிற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் எந்த வகையிலும் குறையாது; திமுக மற்றும் அதிமுகவினர் நடத்தும் மது ஆலைகளில் இருந்து டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்யும் மதுவின் அளவும் குறையாது.
 
தமிழ்நாட்டை சீரழிக்கும் மது அரக்கனை ஒழிப்பதில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருந்தால் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான மதுக்கடைகளை உடனடியாக மூட ஆணையிட வேண்டும். மீதமுள்ள மதுக்கடைகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடுவதாக அறிவித்து, எந்தெந்த மாதத்தில் எத்தனை மதுக்கடைகள் மூடப்படும் என்பதற்கான கால அட்டவணையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்