நாகரீக அரசியலை நோக்கி முன்னேறுகிறதா தமிழகம்?

வியாழன், 26 மே 2016 (16:55 IST)
திமுக பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் அணுகுமுறைகளை பார்க்கும் போது, தமிழக அரசியலில் நாகரீகம் ஏற்பட்டு ஒரு மாற்றம் வந்திருப்பது போல் தெரிகிறது.


 

 
நடந்து முடிந்த சட்டபை தேர்தலில் 6 முனை போட்டி என்று கூறப்பட்டாலும், மக்கள் என்னவோ அதிமுக, திமுகவை தவிர வேறு எந்த கட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் தரவில்லை என்பது தேர்தல் முடிவுகளை பார்க்கும் போதே தெரிகிறது.
 
பொதுவாக தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறும். இந்த முறையும் அப்படித்தான் எதிர்பார்க்கப்பட்டது. 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று திமுக தரப்பு ஆணித்தரமாக நம்பியது.
 
ஆனால், அதிமுகவையே மீண்டும் அமர்த்திவிட்டு, திமுக-வை எதிர்கட்சியாக அமரவைத்துவிட்டனர் மக்கள். ஆனால், இந்த முறை, 89 தொகுதிகளைப் பெற்று பலமான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது திமுக.
 
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத ஆச்சர்யம் அளிக்கும் சம்பவங்கள் தமிழக அரசியலில் நடந்து முடிந்திருக்கிறது.
 
முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே, 100 யூனிட் இலவச மின்சாரம், 500 டாஸ்மாக் கடைகள் மூடுதல், டாஸ்மாக் நேரம் குறைப்பு என்று அதிரடி காட்டினார் ஜெயலலிதா.
 
முக்கியமாக, தமிழக முதல்வராக கடந்த 23ஆம் தேதி ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் முறையான அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
 
திமுக சார்பில் யாரும் செல்ல வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் அந்த விழாவில் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தினார். 
 
அங்கு ஆரம்பித்தது ஒரு சிக்கல். தோல்வி அடைந்த சரத்குமாருக்கு முன்வரிசை, ஸ்டாலினுக்கு பின்வரிசையா? ஜெயலலிதா திருந்தவில்லை... என்று கோபம் காட்டினார் கருணாநிதி. 
 
வழக்கமாக, கருணாநிதியின் இதுபோன்ற அறிக்கைகளுக்கு ஜெயலலிதா தரப்பில் இருந்த எந்த பதிலும் வராது. ஆனால் இந்த முறை வந்தது.   ‘திமுகவையோ, ஸ்டாலினையோ அவமானப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை. ஸ்டாலின் வருவது முன்பே தெரிந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி அவரை முன்வரிசையில் அமரவைக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று பதில் கொடுத்தார் ஜெயலலிதா. இது புதுசு.
 
அதோடுவிடாமல், எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ஆளுங்கட்சியுடன் இணைந்து தமிழக மேம்பாட்டுக்காக பணியாற்ற வருமாறு திமுகவிற்கு அழைப்பும் விடுத்தார் ஜெயலலிதா.
 
இதையெல்லாம், இதுநாள் வரையில் தமிழக மக்கள் கண்டிராதது. இதோடு முடியவில்லை. தனக்கு சாய்தள வசதி ஏற்பாடு செய்து தரப்படவில்லை என்று கூறி, கடந்த ஐந்து வருடங்களாக சட்டசபைக்கு வராமல் இருந்த கருணாநிதிக்கு, சட்டசபையில் தற்போது சாய்தள வசதி செய்து தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் மே 25ஆம் தேதி நடந்தது. அப்போது ஜெயலலிதா உள்ளே வந்து தனது இருக்கையில் அமர்ந்ததும், எதிரே இருந்த மு.க.ஸ்டாலின் அவருக்கு வணக்கம் செலுத்தினார். ஜெயலலிதாவும் புன்னகைத்தவாறே ஸ்டாலினுக்கு பதில் வணக்கம் செலுத்தினார். 
 
இதைக்கண்டு அங்கிருந்த அதிமுக, திமுக எம்.எல்.ஏக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அதேபோல், இத்தனை வருடம் சட்டசபைக்கு வராத கருணாநிதியும் சட்டசபைக்கு வந்து சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். இனி அவர் அடிக்கடி சட்டசபைக்கு வருவார் என்று எதிர்பார்ப்பதால், திமுக எம்.எல்.ஏக்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
 
இதுபோன்ற சம்பவங்கள், தமிழகம் நாகரீகமான அரசியலை நோக்கி முன்னேறுகிறதா என்று அரசியல் பார்வையாளர்களையும், பொதுமக்களையும் யோசிக்க வைத்துள்ளது.
 
சம்பிரதாயமோ.. அரசியல் நாகரீகமோ.... நல்லது நடந்தால் நன்மையே..

வெப்துனியாவைப் படிக்கவும்