கடந்த சில காலமாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடமாநிலத்தவர், தமிழர்கள் இடையே ஏற்படும் மோதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் 20க்கும் மேற்பட்ட வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களோடு துரத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது திருப்பூரில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வாகனத்தில் சென்ற தமிழர் ஒருவர் லைட் எரியாததால் தெரியாமல் வட இந்திய இளைஞர் ஒருவர் மீது மோதியதில் அவரது செல்போன் சேதமடைந்துள்ளது. அதற்கு அவர்கள் கேட்ட காசையும் கொடுத்த தமிழக நபர் தனது பெண் சிறப்பு வகுப்பு முடிந்து பள்ளியில் காத்திருக்கிறாள் என்றும், தான் செல்ல வேண்டும் எனவும் அவர்களிடம் கெஞ்சுகிறார். ஆனால் அவர்கள் அவரது பைக்கை பிடுங்கி வைத்துக் கொண்டு இந்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து திருப்பூர் போலீஸார் விளக்கமளித்துள்ளனர். அதன்படி, திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் சாலையில் 3 நாட்களுக்கு முன்னர் சம்பத்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது லைட் எரியாததால் வடமாநில இளைஞர் மீது மோதியுள்ளார். அதில் வடமாநில இளைஞரின் செல்போன் பழுதானதால் ஏற்பட்ட வாக்குவாதம் இது என கூறப்பட்டுள்ளது.