மத்திய அரசின் அடிமையாக உள்ளதா அதிமுக?: ஜெயக்குமாரின் அடடே விளக்கம்!

சனி, 8 ஜூலை 2017 (09:36 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக தலைமையிலான தமிழக அரசை பாஜக தலைமையிலான மத்திய அரசு பின்னால் இருந்து இயக்குவதாக பரவலாக பேசப்படுகிறது.


 
 
அதிமுகவை பாஜக முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதிமுக மத்திய அரசின் அடிமை போல் செயல்படுவதாகவும், சுய காலில் நிற்காமல் பாஜகவிடம் முழுமையாக சரணடைந்துவிட்டதாக பலரும் விமர்சிக்கின்றனர்.
 
அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து கிடந்தாலும் அந்த மூன்று அணியும் பாஜகவை மீறி எதையும் செய்ய முடியாத சூழலில் தான் உள்ளது. இதனை ஜனாதிபதி தேர்தலில் அதிமுக ஆதரவு அளித்ததிலேயே பார்க்க முடிந்தது. எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க, அதனை தொடர்ந்து ஓபிஎஸ் அணியும் தங்கள் ஆதரவை பாஜகவுக்கு தெரிவித்தது.
 
தினகரன் அணியிடம் பாஜக ஆதரவு கேட்காவிட்டாலும், தானாக முன்வந்து ஆதரவை அளித்தார். இப்படி போட்டிப்போட்டுக்கொண்டு பாஜகவிடம் நல்ல பெயர் வாங்க அதிமுகவின் மூன்று அணிகளும் முயற்சிப்பதை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. அதிமுக அணிகள் மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அரசியல் வட்டாரத்தில் இப்படி நிலவி வரும் இந்த கருத்துக்கு அதிமுகவின் எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அதிமுகவின் 3 அணிகளும் மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது முட்டாள்தனமானது.
 
மத்திய அரசிடம் இருந்து 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வரவேண்டி உள்ளதால் மோடியை சந்தித்து வருகிறோம். தமிழகத்தில் தொடர்ந்து அதிமுக ஆட்சி தான் அமையும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் செயல்பட்டு வருகிறோம் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

வெப்துனியாவைப் படிக்கவும்