இலங்கையின் ரகசிய சித்ரவதைக் கூடம் பற்றி முழு விசாரணை தேவை : ராமதாஸ்

வியாழன், 19 நவம்பர் 2015 (19:11 IST)
இலங்கையில் காணாமல் போன தமிழர்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஐ.நா. குழுவின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 


இலங்கை கிழக்கு மாநிலத்தில் உள்ள திரிகோணமலை மாவட்ட கடற்படை தளத்துக்கு உள்ளே ஒரு சித்ரவதைக் கூடம் ரகசியமாக செயல்பட்டு வந்தது என்பது தான் ஐ.நா. குழு கண்டறிந்த உண்மைகளில் மிகவும் முக்கியமானதாகும்.
 
இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் பல ஆயிரம் பேர் காணாமல் போனதாக குற்றச்சாற்றுகள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில் பெர்னார்ட் துகைமே, தே &ஓங் பைக், துலிட்ஸ்கி ஆகிய 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் அதிகாரிகளை சந்தித்து அக்குழு ஆலோசனை நடத்தியுள்ளது.
 
இலங்கையில் 10 நாட்கள் பயணம் செய்த அக்குழுவினர், திரிகோணமலை மாவட்டத்தில் ரகசிய சித்ரவதைக் கூடம் செயல்பட்டு வந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இலங்கைப் போர் முடிந்து ஓராண்டு வரை இந்த சித்ரவதைக் கூடம் செயல்பட்டு வந்ததாகவும், அங்கு ஏராளமானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. மிகக் குறுகிய காலமே விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டதால் முழு உண்மைகளை வெளிக்கொண்டு வர முடிய வில்லை.  இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்குழு கூறியுள்ளது.
 
இலங்கையில் சித்ரவதைக் கூடம் செயல்பட்டு வந்ததாக வெளியாகியுள்ள இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கவில்லை. ஏனெனில், இலங்கையில் காலம்காலமாகவே சித்ரவதைக் கூடங்கள் செயல்பட்டு வந்தன என்பதும், இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழர்கள் அங்கு வைத்து கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை ஆகும். இலங்கை போர் முடிவடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட புதுவை இரத்தினத்துரை, பாலகுமாரன் உள்ளிட்ட தமிழர் தலைவர்கள் கொழும்பில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் நான்காவது மாடியில் உள்ள சித்திரவதைக் கூடத்தில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்டனர். அதன்பின் இதுவரை அவர்களின் நிலை என்னவென்று உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.
 
இதேபோன்ற சித்ரவதைக் கூடம் ஒன்றைத் தான் ஐ.நா. குழு இப்போது கண்டுபிடித்துள்ளது. இதேபோல் இன்னும் எத்தனை சித்ரவதைக் கூடங்கள் எங்கெங்கு செயல்பட்டன... இன்னும் செயல்பட்டு வருகின்றன என்பது தெரியவில்லை.
 
இலங்கை தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கனோர் வெளிக்கடை சிறை உள்ளிட்ட பல சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளிலும் சித்ரவதைக் கூடங்கள் அமைக்கப்பட்டு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என்பதை ஒதுக்கிவிட முடியாது.
இத்தகைய சித்ரவதைகளும் ஒருவகை போர்க்குற்றம் தான். எனவே, இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய இந்தியா வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கையில் செயல்பட்டு வந்த, செயல்பட்டு வரும் சித்ரவதைக் கூடங்கள் குறித்து பன்னாட்டு குழுவை அனுப்பி முழு விசாரணை நடத்தவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்