மாணவர்களுக்கு குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம்: சபீதா தகவல்

திங்கள், 14 டிசம்பர் 2015 (12:35 IST)
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா கூறியுள்ளார்.

இதுகுறித்தி அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, "கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளையும் சீரமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் போது எந்தவித பிரச்சினையும் இருக்ககூடாது என்பதற்காக அனைத்து பணிகளிலும் மழை நீர் வெளியேற்றம் பணி வேகமாக நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ச்சியாக 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
 
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் தயாராக உள்ள நிலையில் அனைத்து மானவர்களுக்கும் இன்று வழங்கப்பட்டு வருகிறது. வகுப்பறையில் பழுதடைந்த நாற்காலிகள், மேசைகள் மாற்றப்பட்டுள்ளன. பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்தப்படும்.
 
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச பாடத்திட்ட புத்தகம் வழங்கப் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் வருகின்ற பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் உளவியல் ரீதியான ஆலோசனைகள்  வழங்கப்படும்.
 
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மாணவர்களுடைய சான்றிதழ்கள் சேதம் அடைந்து இருக்கிறது. சில மாணவர்களின் சான்றிதழ்கள் தொலைந்தும் இருக்கிறது. இதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மாணவர்கள் இழந்த சான்றிதழக்களை திரும்ப பெற்று கொள்வதற்கு  134 சிறப்பு முகாம்கள் செயல்பட உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 54 முகாம்கள் செயல்பட இருக்கின்றன" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்