வாட்ஸ்-அப் குரூப்பிலிருந்து வெளியேற உளவுத்துறை போலீசாருக்கு உத்தரவு : பின்னனி என்ன?

செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (15:58 IST)
போலீஸ் ரகசியங்கள் வெளியாவதால் உளவுத்துறை போலீசார் வாட்ஸ்-அப் குரூப்பிலிருந்து வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.


 
 
தற்போது இணையதளத்தை விட வாட்ஸ்-அப் பயன்பாடு அதிகரித்துள்ளது. எல்லோர் மொபைலிலும் வாட்ஸ்-அப் வசதி இருக்கிறது. இதன் மூலம், படங்கள், வீடியோக்கள் ஆகியவை ஒரு நொடியில் படுவேகமாக பலருக்கும் பரவி வருகிறது.
 
மேலும், அதில் பலபேர் ஒன்றாக இணைந்து குரூப் என்ற பெயரில் பல தகவல்களை பறிமாறி வருகின்றனர். எனவே வாட்ஸ் அப் என்பது இப்போது பலருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அது போலீசாரையும் விட்டு வைக்கவில்லை. பெரும்பாலான போலிசார்கள் தங்கள் மொபைலில் வாட்ஸ்-அப் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பலர் பேஸ்புக்கிலும் இணைந்துள்ளார்கள்.
 
இதன் மூலம் அவர்கள் பல தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் தற்போது அதற்கு தடை விதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. யாருக்கும் தெரியாமல் காக்கப்பட வேண்டிய ரகசியங்கள் வெளியாவதால், மாநில உளவுபிரிவு போலிசார் அனைவரும் வாட்ஸ்-அப் குரூப்பிலிருந்து வெளியேற வேண்டும் என மாநில உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
 
இதுபற்றி கருத்துக்கூறிய உளவுப்பிரிவு போலீசார் “பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் மத்திய உளவுத்துறையை சேர்ந்த போலீசார் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் மாநில உளவு போலீசாருக்கு அப்படி எந்த விதிமுறையும் இதுவரை வகுக்கப்பட வில்லை. 
 
அதனால், மாநில உளவு போலிசார் வாட்ஸ்-அப் மூலம் பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். சில சமயம் இது சிக்கலை ஏற்படுத்துகிறது. அதை தவிர்க்கும் பொருட்டு வாட்ஸ்-அப்பிலிருந்து எங்களை வெளியேறும் படி  ஐ.ஜி சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினர்.
 
இதைத் தொடர்ந்து தமிழக மாநில உளவு பிரிவு போலிசார் வாட்ஸ்-அப் குரூப்பிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்