கொடுத்த வாக்குறுதிகளை திறனற்ற திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்-அண்ணாமலை
வெள்ளி, 7 ஜூலை 2023 (16:36 IST)
தமிழகத்தில் தென்னை விவசாயிகளை வஞ்சிப்பதை திறனற்ற திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் 11 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வரும் விவசாயிகளை ஆதரிக்க, தேங்காய், கொப்பரைத் தேங்காய் முதலானவற்றை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை, விற்பனை செய்யவேண்டும் என்றும், சத்துணவில் தேங்காய் பால் போன்றவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக பாரதிய ஜனதா கட்சி இந்த ஆண்டு ஜனவரி போராட்டம் நடத்தியது.
திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையில், தேர்தல் வாக்குறுதி எண் 65 மற்றும் 66ல், கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காயை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யும் என்றும், நியாய விலைக் கடைகள்மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் என்றும் கொடுத்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாமல், தமிழக தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், கடந்த ஒன்பது ஆண்டுகளில் கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை 107 சதவீதம் உயர்த்தியுள்ளார். 2013-14ஆம் ஆண்டு, ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை 52.50 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை 108.6 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தென்னை விவசாயத்தில் முன்னோடியான கொங்கு பகுதியின் விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெற, உரிக்கப்பட்ட தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலை கடந்த 9 ஆண்டுகளில் 106 சதவீதம் உயர்ந்து தற்போது ஒரு கிலோவுக்கு ரூபாய் 29.3 ஆக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 420 கோடி ரூபாய் மதிப்பிலான கொப்பரையை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு தேசிய வேளாண் விற்பனை இணையம், 640 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தேங்காய் ரூபாய்க்கு விற்கும் நிலையில், நமது மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களின் அறிவிப்பின்படி, தேங்காய் ஒன்றிற்கு சுமார் 14 ரூபாய் விவசாயிகளுக்குக் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.
ஆனால் தமிழக அரசு, மட்டை உரிக்கப்பட்ட தேங்காயை, மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையில் கொளமுதல்செய்ய, எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. கொங்கு பகுதியில் உள்ள விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்குடன் இந்த திறனற்ற திமுக கொண்டிருக்கிறது. இது தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய இயலாத தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதை இந்த திறனற்ற திமுக அரசு எப்போது உணரும்? அரசு செயல்பட்டுக் பாமாயில் விநியோகத்தை குறைத்து, தமிழ்நாட்டில் மாணவ மாணவிகளின் சத்துணவுத் திட்டத்திற்கும், ரேஷன் கடைகளில் பொது விநியோகத்திற்கும் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய்யைப்பயன்படுத்த வேண்டும் என்றும், மட்டை உரிக்கப்பட்ட தேங்காயை, உடனடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.