கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பணியற்றிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், சோதனையின் போது இரு நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். தலைமறைவானக் குற்றவாளிகளை தமிழக், கேரள போலிஸார் தேடி வருகின்றனர்.
கொலை குற்றவாளிகளென சந்தேகிக்கப்படும் இருவரான அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இரண்டு பேரின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். மேலும் இது திட்டமிட்ட கொலைதான் எனவும் கொலையாளிகளை பிடிக்க உதவுபவர்களுக்கு 7 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி எப்படி அவர்களிடம் வந்தது என்ற விசாரணையி மும்பையைச் சேர்ந்த இஜாஸ் பாஷா என்பவரை போலிஸார் சந்தேகித்து அவரைக் கைது செய்துள்ளனர். ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் இஜாஸ் பாஷா மும்பையில் இருந்து நான்கு துப்பாக்கிகளை கொண்டுவந்ததாகவும், மூன்று ஏற்கெனவே பெங்களூருவில் கைதான ஐ எஸ் தீவிரவாதிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மற்றொன்று எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் பயன்படுத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்துள்ளனர். இஜாஸ் பாஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.