ஆர்.கே.நகரில் இந்திய ஜனநாயக கட்சி போட்டி: பாரிவேந்தர் அறிவிப்பு

சனி, 6 ஜூன் 2015 (11:12 IST)
சென்னை ஆர்.கே. நகர் தேர்தலில் பாஜகவின் முடிவுக்காகக் காத்துள்ளோம். அங்கு  பாஜக அல்லது தேமுதிக போட்டியிட்டால் அவர்களை ஆதரிப்போம், அல்லது எங்களைப் போட்டியிடச் சொன்னால், நாங்கள் தயாராக உள்ளோம் என பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
 
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கலந்து கொண்டு பேசியதாவது:–
 
இந்திய ஜனநாயக கட்சி தொடங்கி வெற்றிகரமாக 5 ஆண்டுகள் முடிந்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட ரீதியாக 68 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
 
வரும் 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து, எங்களது கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகிறோம். 
 
சென்னை ஆர்.கே. நகர் தேர்தலில் பாஜகவின் முடிவுக்காகக் காத்துள்ளோம். அங்கு  பாஜக அல்லது தேமுதிக போட்டியிட்டால் அவர்களை ஆதரிப்போம், அல்லது
எங்களைப் போட்டியிடச் சொன்னாலும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.
 
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அகற்ற வேண்டும். இதற்காக ஜூன் 12ஆம் தேதி மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் போது 80 சதவீத ஒப்புதல் பெற்ற பின்பே முடிவு எடுக்க வேண்டும்.
 
தமிழக சட்டமன்றத்தில் 1986ஆம் ஆண்டு வரை சட்ட மேலவை இருந்தது ஆனால் 1986ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் சட்ட மேலவையை திடீர் என கலைத்தார்.
 
பின்பு, திமுக ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் சட்ட மேலவை கொண்டு வர முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.
 
சட்டசபைத் தேர்தல் களத்தில் அறிவும், திறமையும் உள்ளவர்கள் பல காரணங்களால் போட்டியிட தயங்குகி வருகின்றனர். அறிவு படைத்தவர்களின் அனுபவங்களும், அறிவுரைகளும் ஆட்சியாளர்களுக்கு தேவை. இதனால், தமிழகத்திற்கு சட்ட மேலவை அவசியமானதாகும்.
 
எனவே, தமிழகத்தில், அனைத்து கட்சி பிரதிநிதிகளை அரசு அழைத்து விவாதம் நடத்தி தமிழகத்தில் சட்டமேலவையை கொண்டு வர வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்