பெரியார் உயிரோடு இருந்தால் அவரையும் ஜெயிலுக்கு அனுப்பியிருப்பார்கள் - சுபாஷினி அலி
சனி, 14 மே 2016 (09:40 IST)
இராஜபாளையம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஏ.குருசாமியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “1965 முதல் 1967 வரை சென்னையில் உள்ள கல்லூரியில் நான் மாணவராக படித்த போது, அண்ணா, நெடுஞ்செழியன், கலைஞர் ஆகியோர் பேசுகிறார்கள் என்றால் அவர்களின் பேச்சைக் கேட்க மிகப் பெரிய கூட்டம் கூடும். ஆனால், தற்போது ஜெயலலிதாவும், கலைஞரும் வரும் கூட்டத்திற்கு ரூ.200 முதல் 300 வரை கொடுத்து ஆட்களை வரவழைக்கின்றனர். அதிலும் கூட பெண்கள் என்றால் ரூ.200, ஆண்களுக்கு ரூ.300 என்ற பாகுபாட்டுடன் திரட்டுகின்றனர்.
மத்திய காங்கிரசை எதிர்த்த போராட்டம், சாதிக்கு, மூட நம்பிக்கைக்கு எதிரான போராட்டம், சமூக நீதி, சமத்துவம் என மக்கள் மத்தியில் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினர். இதனால் திராவிட இயக்கம் வளர்ந்தது. பின்பு, இரு கட்சிகளாக ஆனது. பின்பு, காங்கிரஸ் எதிர்ப்பை கைவிட்டனர்.
சமூக நீதியையும் கைவிட்டு, ஊழலில் திளைத்தனர் திமுக, அதிமுக தலைவர்கள். மாநில உரிமைகளுக்காக மத்திய அரசை எதிர்த்து போராடுவதை கைவிட்டு, பதவிக்காக லஞ்சத்தில் திளைக்கத் துவங்கினர். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுடன் கைகோர்த்தனர். இதனால், தற்போது சிபிஐ விசாரணையில் சிக்கியுள்ளனர்.
பெரியாரும், அண்ணாவும் சாதிக்கும், மூட நம்பிக்கைக்கும் எதிராக ஏராளமான புத்தகங்களை எழுதினர். தற்போது, இருவரும் உயிரோடு இருந்தால், அவர்களையும் ஜெயலலிதாவின் காவல்துறையினர் ஜெயிலுக்கு அனுப்பியிருப்பார்கள்.
தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக சங்கர் படுகொலை செய்யப்பட்டார். தற்போது அவர் மனைவி கௌசல்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார். தமிழக அரசு அவருக்கு உரிய நிவாரணம் கொடுக்கவில்லை. அவருக்கு ஆதரவாக செங்கொடி இயக்கமும், மாதர் சங்கமும், எல்.ஐ.சி ஊழியர்களும் 6 கட்சித் தலைவர்களும் உள்ளனர்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி வெற்றி பெற்றால், தொழிலாளர்களுக்கான உரிமை, மருத்துவ செலவு, விடுமுறை, பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும். தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க நெல்லுக்கு கட்டுப்படியான விலை வழங்கப்படும்.
50 ஆண்டுகளாக இரு கட்சி ஆட்சியில் கிரானைட் கொள்ளை பணம், மணல் கொள்ளை பணம், மது விற்ற பணம் ஆகியவற்றால் வயிறு நிரம்பியுள்ளது. ஆனால், சாதாரண ஏழை மக்களின் வயிறு காய்ந்த நிலையில் உள்ளது. அவர்களின் வயிறு நிரம்ப வேண்டுமெனில் இரு கட்சியினரையும் தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்.
வாக்கை, விலை பேசமால் சரியாக பயன்படுத்த வேண்டும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, அதேபோல் 2 மாதத்திற்கு முன்பு வரை கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா ஆகியோர், தேர்தல் வந்ததால் மக்களை சந்தித்து வாக்கு கேட்க வந்துள்ளனர்” என்றூ கூறியுள்ளார்.