'நல்ல தீர்ப்பு கிடைத்தால், தமிழ்நாட்டிற்கே தீர்வு ஏற்படும்' - ஸ்டாலின் பேச்சு

செவ்வாய், 27 அக்டோபர் 2015 (17:00 IST)
எனது தொகுதியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதில் நல்ல தீர்ப்பு கிடைத்தால், தமிழ்நாட்டிற்கே தீர்வு ஏற்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை தொடங்கி, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 3ஆவது கட்டத்தை, நேற்று சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் தொடங்கினார்.
 
இதன் ஒரு பகுதியாக இடைப்பாடியில் மகளிருடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “நான் இலவசங்களை குறைசொல்ல மாட்டேன். ஆனால், தரமான பொருட்களை வழங்க வேண்டும்.
 
திமுக ஆட்சியில் ரேஷன்கார்டு வைத்திருந்த அனைவருக்கும் இலவச டி.வி. வழங்கப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் அவர்களின் கட்சிக்காரர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் மட்டுமே இவை வழங்கப்படுகிறது.
 
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மின்வெட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. நெசவாளர்கள் வேலையின்றி உள்ளனர்.
 
ரேஷனில் எந்த பொருளும் கொடுப்பதில்லை. அதனால், தமிழ்நாட்டில் நீங்களெல்லாம் சேர்ந்துதான் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் உங்களை தேடிவந்துள்ளேன்.
 
முதியோர் உதவித்தொகையும் 70 சதவீதம் நிறுத்தப்பட்டு விட்டன. எனது தொகுதியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதில் நல்ல தீர்ப்பு கிடைத்தால், தமிழ்நாட்டிற்கே தீர்வு ஏற்படும்” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்