ஐஏஎஸ் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

சனி, 12 டிசம்பர் 2015 (14:20 IST)
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக ஐஏஎஸ் தேர்வை சில வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 

 
இது குறித்து கருணாநிதி ஒரு கடிதம் எழுதியுள்ளார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
 
மாநில அரசு நடத்தும் அனைத்திந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தின் மாணவர்கள் நேற்று என்னை சந்தித்தனர். சென்னை பாலா ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனர் எஸ்.பாலமுருகன் கையெழுத்திட்ட மனு ஒன்றை என்னிடம் அளித்தனர்.
 
அப்போது கனிமொழி எம்.பி. உடன் இருந்தார். அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்த விவரங்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
 
தற்போது வெள்ள சேதங்களால் ஏற்பட்டுள்ள துயரங்களால் அவர்கள் மனுவில் கூறியுள்ளபடி வருகிற 18 ஆம் தேதி நடைபெற உள்ள ஐஏஎஸ் தேர்வை தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
 
பலத்த மழை மற்றும் எதிர்பாராத திடீர் வெள்ளப் பெருக்கால் சென்னையில் கடும் சேதம் ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை தாங்கள் பார்வையிட்டீர்கள். ஐஏஎஸ் தேர்வுக்காக சென்னையில் ஏறத்தாழ 1,000 மாணவர்கள் தயாராகி வந்தனர்.
 
நவம்பர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை பெய்த பெரும் தொடர் மழையால் அவர்கள் கடும் துன்பத்துக்கும் துயரத்துக்கும் ஆளாகி உள்ளனர். பயிற்சி மையம் அடையார் ஆற்றின் கரையில் உள்ளது. அது வெள்ளத்தால் சூழ்ந்து இருந்தது.
 
அங்கிருந்த மாணவர்கள் உணவு மற்றும் மின்சாரம் இன்றி வெளியேறினார்கள். இதனால் தேர்வுக்காக ஆண்டு முழுவதும் தயாரானது வீணானது.
 
சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரி, ஆந்திர பிரதேசத்திலும் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது.
 
மத்திய தேர்வாணை குழு ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு நடத்தினால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேச மாணவர்கள் மற்ற மாநில மாணவர்களுடன் தேர்வில் சரி சமமாக போட்டியிட முடியாது.
 
அது பொது நீதி மற்றும் சமூக நீதிக்கு எதிராக அமையும். இந்த மாணவர்களில் பெரும் பாலானவர்கள் சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள்.
 
எனவே, ஐஏஎஸ்.தேர்வை சில வாரங்களுக்கு தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் மிக அவசரமாக தலையிட வேண்டும் என வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்