'மாரியம்மன் மீது சத்தியம் செய்து சொன்னேன்' - திருமாவளவன்
வெள்ளி, 6 மே 2016 (11:01 IST)
கிராமத்து பெண்களிடம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருப்பதை அறிந்தது அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மாரியம்மன் மீது சத்தியம் செய்து சொன்னேன் என்று விடுதலை கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் கடந்த சில நாட்களாக தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது தேர்தல் நிலவரம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–
கே: காட்டுமன்னார் கோவில் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
ப: இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதில் சந்தேகத்திற்கு இடமில்லை. மிக சிறப்பாக இருக்கிறது. ஓட்டுக்கு திமுக, அதிமுக இரு கட்சிகளும் பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கிராமங்களில் கோவில் கட்ட பணம் கொடுக்கிறார்கள். பணத்தை இறைக்க முயற்சிக்கிறார்கள். அதையும் தாண்டி நான் வெற்றி பெறுவேன்.
கே: மக்களிடம் உங்களுக்கு வரவேற்பு உள்ளதா?
ப: இத்தொகுதி மக்கள் என்னை மாற்றாக பார்ப்பது இல்லை. குடும்பத்தில் ஒருவனாகப் பார்க்கிறார்கள், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பதோடு எனக்கு தேர்தல் செலவுக்காக பணமும் தருகிறார்கள். சாதாரண குடும்பத்தில் உள்ள இவர்கள் ரூ.100 முதல் ரூ.500 வரை தேர்தல் நிதியாக தந்து வெற்றி பெற மனதார வாழ்த்தியதை பார்க்கும் போது பெண்களிடம் அதிக எழுச்சியும் வரவேற்பும் காணப்படுகிறது.
கே: தொகுதி மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
ப: வாக்குச் சேகரிக்க ஒவ்வொரு வீடாக நடந்து செல்லும் போது அவர்கள் என்னை சொந்த பிள்ளையாக உபசரிப்பதை பார்த்து நெகிழ்ந்து விட்டேன். கிராமத்து பெண்கள் என்னிடம் கேட்ட அந்த வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை.நாங்கள் உனக்கு ஓட்டு போடுகிறோம்... நீ சாராயக் கடையை மூடுவேன் என சாமி மீது சத்தியம் செஞ்சுட்டு போ... இந்த வார்த்தை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
கிராமத்து பெண்களிடம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற அழுத்தமான உணர்வு மேலோங்கி இருப்பதை அறிய முடிந்தது. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மாரியம்மன் மீது சத்தியம் செய்து சொன்னேன்.
நான் மட்டும் வெற்றி பெற்றால் போதாது? தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெற வேண்டும். நமது கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும். அது உங்களை போன்ற தாய்மார்களின் கையில் தான் உள்ளது என்றேன்.
கே: மதுவிலக்கை திமுக, அதிமுக கொண்டு வருவதாக கூறுகிறதே அது சாத்தியமா?
ப: அதிமுக, திமுகவால் மதுக்கடைகளை மூட முடியாது. ஏனென்றால் மது உற்பத்தி ஆலைகளுக்கு திமுக, அதிமுகவினர் உரிமையாளராக உள்ளனர். அதனால் சாராயக் கடைகளை மூடினால் மது ஆலைகளை மூடவேண்டிய நிலை உருவாகும் அதனால் திமுக, அதிமுக தலைவர்கள் அச்சப்படுகிறார்கள்.
கே: காட்டுமன்னார் கோவில் தொகுதியை சாராதவராக நீங்கள் இருப்பதால் வெற்றி பாதிக்குமா?
ப: அந்த தொகுதியை சார்ந்தவர், சாராதவர் என்று என்னை யாரும் பிரித்து பார்ப்பது இல்லை. 4 முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறேன். எல்லோருக்கும் நான் நன்கு அறிமுகமானவன். மேலும் எனது சொந்த ஊர் வெகு அருகில் உள்ள குன்னம் தொகுதியில் உள்ளது. வெளியூர்காரனாக என்னை யாரும் பார்க்கவில்லை. இதனால் எனது வெற்றி பாதிப்பது இல்லை.
கே: அதிமுக தேர்தல் அறிக்கையில் நிறைய இலவச திட்டங்கள் இடம் பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது பற்றி?
ப: இலவச திட்டங்கள் கவர்ச்சி திட்டமாக உள்ளது. தமிழக மக்கள் கவர்ச்சி அறிவிப்புக்கு இரையாக வேண்டாம். இது மிகவும் ஆபத்தானது. இலவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கை என்றால் அது மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கைதான்.
கே: தலித் அல்லாத பிற சமுதாய மக்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
ப: இந்த கூட்டணியில் தலித் அல்லாத முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பிற சமுதாயத்தினரும் எனக்கு அதிக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.