கடற்கரைக்கு சென்றபோது என்னை 2 பேர் கற்பழித்தனர் - உயிர் தப்பிய பெண் பேட்டி

வெள்ளி, 19 டிசம்பர் 2014 (09:21 IST)
அரவிந்தர் ஆசிரம விவகாரத்தில் தற்கொலை செய்ய கடற்கரைக்கு சென்றபோது தன்னை 2 பேர் கற்பழித்ததாக உயிர் தப்பிய ஹேமலதா கூறியுள்ளார்.
 
அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் இருந்து வெளியேறிய 5 சகோதரிகளும் தங்கள் பெற்றோருடன் தற்கொலை செய்ய கடலில் குதித்ததில் 4 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான ஹேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தோம். அங்கு எங்களுக்கு பாலியல் தொந்தரவுகள் வந்தன. இதனை எதிர்த்து ஆசிரமத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினோம். போலீசில் புகார் அளித்தோம். ஆனால் அதன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை ஆசிரம நிர்வாகம் வெளியேற்றியதால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்தோம்.
 
பெற்றோர் வீட்டிற்கு சென்ற நாங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தோம். பின்னர் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு எடுத்தோம். அதிகாலையில் குடும்பத்துடன் சின்னகாலாப்பட்டு கடற்கரைக்கு சென்றோம். அப்போது அங்கு இருந்த 2 பேர் என்னை தூக்கிச் சென்று கற்பழித்தனர். ஏற்கனவே வேதனையில் இருந்த எங்களுக்கு இது பெரிய கொடுமையாக இருந்தது.
 
அதன்பின்னர் நாங்கள் 7 பேரும் கடலில் குதித்தோம். எங்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் 4 பேரை காப்பாற்றினர். நான் கற்பழிக்கப்பட்டதை நிரூபிக்க டி.என்.ஏ. சோதனை நடத்தத் தயாராக உள்ளேன்.
 
இவ்வாறு ஹேமலதா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்