’பல்லை இளித்து, காலை நக்கிப் பிழைக்கிறவன் நான் அல்ல’ - திருமாவளவன் கொந்தளிப்பு

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (15:12 IST)
திருமாவளவன் மானம் கெட்டுப் பல்லை இளித்து, காலை நக்கிப் பிழைக்கிறவன் அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தனது பிறந்தநாள் விழாவின் போது கூறியுள்ளார்.
 

 
ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 54-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும், அந்த பிறந்தநாள் விழாவை ’மாற்று அரசியல், கூட்டணி ஆட்சி’ என்ற கோஷத்தை முன்வைத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மாநாடு நடைபெற்றது.
 
விழாவில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் திருமாவளவனை வாழ்த்தி பேசினர்.
 
இறுதியாக விழா நாயகன் திருமாவளவன் பேசுகையில், “இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடு. ஏனென்றால், ஒரு கோட்பாட்டின் அடிப்படையில், அரசியல் அரங்கில் மாபெரும் விவாதத்தைக் கிளப்புகிற மாநாடாக உள்ளது. புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்தை, மேற்கோளாகப் பதிவு செய்துள்ளோம்.
 
வெறும் ஓட்டு, பதவி, அதிகாரம், சுகம் என்று நினைக்கிற கும்பலுக்கு மத்தியில், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தேசத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் கவலைப்படுகிற விதத்தில் இந்த மாநாட்டை ஏற்படுத்தி உள்ளோம்.
 
அம்பேத்கரையும் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரையும் கொள்கை ஆசான்களாக நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதுதான் பலரின் கண்களை உறுத்துகின்றன; நெஞ்சைப் பதறவைக்கிறது; அடிவயிறை எரிச்சலடைய வைக்கிறது. அதனால், திருமாவளவனைக் குறிவைத்து மிகக் கேவலமான அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
 
அவர்கள் பொய்ப் பிரசாரத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர். அதிகாரம், பரிசு, பதவி முக்கியம் என்று நான் கருதி இருந்தால், நான் எடுத்த முடிவு சட்டசபைத் தேர்தல் நேரத்தில் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
 
தோல்வியைப் பற்றிக் கவலையில்லை. நாம் எடுத்துவைத்திருக்கிற மாற்று அரசியல்தான் முக்கியம் என்று உறுதிப்பாட்டோடு இருக்கிறோம். நம் கொள்கைக் கற்பை எவராலும் கலங்கப்படுத்திவிட முடியாது. கட்சிக்குள் முன்னணிப் பொறுப்பாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
 
எவ்வளவு கேடான அரசியல். எவ்வளவு தற்குறித்தனமான அரசியல். எவ்வளவு சுயநலமான அரசியல். எவ்வளவு அருவெருப்பான அரசியல்? அதைக் கண்டிக்காதவர்கள் இன்று விடுதலைச் சிறுத்தைக்கு அறிவுரை கூறக் கிளம்பி உள்ளனர்.
 
மானம் கெட்டுப் பல்லை இளித்து, காலை நக்கிப் பிழைக்கிறவன் அல்ல திருமாவளவன்... பதவிக்காகச் சுயமரியாதையை அடகுவைப்பவன் அல்ல திருமாவளவன்.
 
ஆனால், சிலர் மாற்றுச் சமூகங்களை எல்லாம் நமக்கு எதிராகத் திருப்பி, என் ரத்தத்தில் சோறு பிசைய நினைக்கிறார்கள். என்னைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், இரண்டு சமூகங்களுக்கு இடையில் மிகப்பெரிய மோதலை உருவாக்க நினைப்பதை நினைத்துக் கவலைப்படுகிறேன்.
 
மதவாத சக்திகள், முஸ்லிம் - கிறிஸ்தவர்களுக்கான எதிரான வெறுப்பு அரசியல். சாதியவாதச் சக்திகள், தலித் மக்களுக்கான எதிரான வெறுப்பு அரசியல் என்ற இந்த இரண்டை மட்டும் மையப்படுத்தி, அரசியலைச் சந்திக்கிற ஒரு தற்குறித்தனத்தை இங்கு நாம் பார்க்கிறோம்.
 
இதில் இருந்து இந்தத் தேசத்தைக் காக்க, நாம் இடதுசாரிகளோடு என்றும் கைகோர்த்து நிற்போம். இதில் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க, அண்ணன் வைகோவோடும் என்றும் கைகோர்த்து நிற்போம்’’ என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்