விஜயகாந்தும் வாசனும் போனால் போகட்டும் என்று கூறவே இல்லை : வைகோ விளக்கம்

புதன், 8 ஜூன் 2016 (13:11 IST)
மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விஜயகாந்தும், வாசனும் போனால் போகட்டும் என்று நான் கூறவே இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.


 

 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நலக்கூட்டணி. இதனால் விஜயகாந்த், திருமாவளவன், ஜி.கே. வாசன் ஆகியோர் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது.
 
அந்நிலையில், சட்டசபை தேர்தலில் முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக, மதிமுக நிர்வாகிகள் உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் பேசிய வைகோ “ ஒவ்வொரு கால கட்டத்திலும், கட்சியில் சிலர் இணைவார்கள், சிலர் வெளியேறுவார்கள். அதைபற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. 
 
விஜயகாந்தும், ஜி.கே.வாசனும் எங்கள் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்றுதன் விரும்புகிறோம். ஆனால் நம் எண்ணப்படி அவர்கள் இல்லை. அப்படி போக விரும்பினால் போகட்டும். அவர்களை இனி எந்த கட்சியும் சேர்த்துக் கொள்ளாது” என்று கூறியதாக செய்திகள் வெளியானது.
 
வைகோவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை அதுபற்றி வைகோ விளக்கம் கொடுக்காமல் அமைதியாகவே இருந்தார். தற்போது பற்றி அவர் வாய் திறந்துள்ளார்.
 
அவர் கூறும்போது “தேர்தல் சமயங்களில் திமுகவினர் இதுபோன்ற நச்சுக்கணைகளை ஏவுவது வழக்கம். எனவே இதுபற்றி பேசாமல் இருந்தேன். ஆனால் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பூதாகரமாகி விட்டதாக உணர்கிறேன். 
 
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான் அப்படி எதுவும் பேசவே இல்லை. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எதிரான மனநிலையில் இருந்த விஜயகாந்தை எங்கள் கூட்டணிக்கு இழுத்தால் கூட்டணி வலுப்பெறும் என்றே நான் முயற்சி செய்தேன். அந்த முயற்சி வெற்றி பெற்றது. வாசனும் எங்கள் பக்கம் வந்தார்.
 
விஜயகாந்தை கூட்டணியில் இழுக்க பாஜக அழுத்தம் கொடுத்தது. திமுக தரப்பிலிருந்து 80 தொகுதிகள் மற்றும் பெரும் தொகை கொடுக்க முன் வந்தனர். ஆனால், விஜயகாந்த் அந்த செய்தியை கொண்டு வந்த நபரைக் கூட விஜயகாந்த் சந்திக்கவில்லை. அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு அவர் எங்களுடன் சேர்ந்தார். இதனால் அவர் மீதான மதிப்பு ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. 
 
அதேபோல், ஜி.கே வாசனும் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். நாங்கள் கேட்ட பல தொகுதிகளை விட்டுக் கொடுத்தார். மேலும் எல்லா தொகுதிகளிலும் எங்களுக்காக பிரச்சாரம் செய்தார். அவர் மீதும் மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது என்றுதான் கூறினேன்.
 
ஆனால், என் மீது களங்கம் ஏற்படுத்தவே, விஜயகாந்தும் வாசனும் போனால் போகட்டும் என்று நான் பேசியதாக திமுகவினர் திட்டமிட்டு வதந்தி பரப்புகின்றனர். அதில் உண்மையில்லை” என்று வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்