தூத்துக்குடியில் ஆடு திருடி கார், 2 ஆட்டோக்கள் உட்பட ஆடம்பர வாழ்க்கை நடத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெய்ஞானபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர் மாடசாமி தலைமையில் போலீசார் மேல மானாடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆடுகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்துமாறு கை நீட்டினர்.
ஆனால், சரக்கு ஆட்டோவில் இருந்தவர்கள், அதனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர். உடனே போலீசார் அவர்களை துரத்திச் சென்றனர். அப்போது சாலையோர பனை மரத்தில் லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
சரக்கு ஆட்டோவில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் குலசேகரன்பட்டினம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த வின்சென்ட் மகன் பிரபாகர் (48), அவருடைய மனைவி கிருஷ்ணமணி (45) என்பது தெரியவந்தது.மேலும் அவர்கள் சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம், நாசரேத் பகுதிகளில் ஆடுகளை திருடியது தெரியவந்தது.
காவல்துறை விசாரணையில் பிரபாகர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, 2வதாக கிருஷ்ணமணியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு பல்வேறு இடங்களில் ஆடுகளை திருடி உள்ளனர்.
அந்த பணத்தில் கார், 2 ஆட்டோக்கள், ஒரு லோடு ஆட்டோ ஆகியவற்றை வாங்கியது தெரியவந்தது. அதனை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.