உழவர் வயல் தின விழாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு

திங்கள், 27 மார்ச் 2023 (07:58 IST)
ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் இன்று நடைபெற்றது.
 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிர்ப்பாதுகாப்பு மையம் & விரிவாக்க கல்வி இயக்ககம், தைவானில் உள்ள உலக காய்கறி மையம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில் இன்று (மார்ச் 25) நடைபெற்றது.

செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெற்ற  இப்பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள், களை மற்றும் பூச்சி மேலாண்மை, பயிர்களைத்தாக்கும் நோய்கள் மற்றும் அதற்கான இயற்கை வழி தீர்வுகள் என விவசாயிகளின் அடிப்படை பிரச்சனைகளைப்பற்றி அந்தந்த துறையைச்சேர்ந்த நிபுணர்கள் பேசினார்கள்.

குறிப்பாக, நூற்புழு வகைகள், அதன் தாக்குதல்கள், அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி முனைவர் சீனிவாசன் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.



பயிர்களை தாக்கும் நோய்கள், நோய்க்காரணிகளான பூஞ்சைகள், வைரஸ்கள் குறித்து பல தகவல்களுடன் பயிர்நோயியல் துறையைச்சேர்ந்த முனைவர் அங்கப்பன் அவர்கள் விளக்கினார். உயிரி தொழில்நுட்பவியல் துறையைச்சேர்ந்த முனைவர் நா. மணிகண்ட பூபதி, உதவி தோட்டக்கலைத் துறை இயக்குநர் திருமதி. நந்தினி, பயிற்சிப் பிரிவு மற்றும் வேளாண் விரிவாக்க கல்வி இயக்ககத்தை சேர்ந்த முனைவர் ந. ஆனந்தராஜா, ஈஷா மண் காப்போம் இயக்கத்தை சேர்ந்த ஜெ. பிரபாகரன் ஆகியோர் தங்கள் துறைசார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.

மேலும், மண் காப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்