கோடி கோடியாக ஊழல் செய்தவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்? - திருமாவளவன் கேள்வி

ஞாயிறு, 8 மே 2016 (14:43 IST)
சாராய ஆலையின் உரிமையாளர்களாக உள்ளவர்கள், எப்படி ஆலையை மூடுவார்கள்? என்றும் கோடி கோடியாக ஊழல் செய்தவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

 
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணியின் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்.
 
நேற்று சனிக்கிழமையன்று (மே 7) சோழிங்கநல்லூர், வேளச்சேரி சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், ஆயிரம்விளக்கு, அண்ணா நகர் உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் கோரி ஆதரவு திரட்டினார்.
 
அப்போது பேசிய திருமாவளாவன், ”தமிழக அரசியல் களத்தில் இது முற்றிலும் மாறுபட்ட தேர்தல். அதிமுக, திமுக இருமுனை போட்டி மட்டுமே 50 ஆண்டுகளாக நிகழ்ந்தது. இதற்கு எதிராக தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த மாற்றம் ஆள் மாற்றம் அல்ல; அரசியல் மாற்றம்.
 
கூட்டணி இல்லாத காரணத்தால் தான் அனைத்து அதிகாரங்களும் ஒருவரின் கையில் குவிந்து கிடக்கிறது. சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் மேசையை தட்டுவது. காலில் விழுவது. இந்த இரண்டை மட்டும் தான் சுதந்திரமாகச் செய்ய முடியும். ஒரு கட்சி ஆட்சி முறை அகல வேண்டும். கூட்டணி ஆட்சி மலர வேண்டும்.
 
கூட்டணி அமைந்தால் அனைத்து அமைச்சர்களும் தங்களின் கருத்துகளை வெளிப்படையாக கூற முடியும். அரசின் தவறை சுட்டிக் காட்ட முடியும். கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் இவை அனைத்தும் சாத்தியமாகும்.
 
அதை தரக்கூடிய ஒரே அணி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி மட்டுமே.மதுவிலக்கை படிப்படியாக குறைப்போம் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார். ஆட்சியில் இருந்த போது மதுவிலக்கு பற்றி வாய்திறக்காத திமுக இப்போது நாங்கள் மது விலக்கை கொண்டுவருவோம் என்கிறது. இந்த இரண்டு கட்சிகளை சார்ந்தவர்கள்தான் சாராய ஆலையின் உரிமையாளர்களாக உள்ளார்கள். இவர்கள் எப்படி ஆலையை மூடுவார்கள்?
 
கோடி கோடியாக ஊழல் செய்தவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்? தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி மட்டுமே பூரண மதுவிலக்கை கொண்டு வரும். ஊழலை ஒழிக்கும்” என்று கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...

வெப்துனியாவைப் படிக்கவும்