இதுகுறித்து லட்சுமணன் கூறியதாவது, “நான் பணியாற்றும் கால் டாக்சி அலுவலகம் ஆயிரம் விளக்கு காதர்நவாஸ் கான் சாலையில் உள்ளது. கடந்த 2-ந்தேதி அலுவலகம் அருகே நடந்து சென்ற போது சாலையில் சிறிய பொருள் ஒன்று மின்னியது. எடுத்து பார்த்த போது ராசிக்கல் மோதிரம் போன்று தெரிந்தது. அதனை எடுத்து காரில் பொருட்கள் வைக்கும் இடத்தில் போட்டுவிட்டேன். பின்னர் 3 நாட்கள் கழித்து அந்த மோதிரத்தை வீட்டில் வைத்துவிட்டேன். இந்தநிலையில் ‘யூடியூப்’ இணையதளத்தை பார்த்த போது, ‘நடிகர் விக்ரம் மகளுடைய வைர மோதிரம், எனது அலுவலகம் அருகே தொலைந்து போன தகவலை அறிந்தேன்.
செய்தித்தாள்களில் வந்த செய்தியையும் பார்த்தேன். என்னிடம் கிடைத்த மோதிரம், அந்த மோதிரமாக இருக்குமோ? என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து நான் உறுப்பினராக இருக்கும் காந்தி உலக மையத்தின் தலைவர் எம்.எல்.ராஜேசிடம் தெரிவித்தேன். என்னிடம் கிடைத்த மோதிரம், நடிகர் விக்ரம் மகள் மோதிரமா? என்பதை உறுதி செய்வதற்காக எம்.எல்.ராஜேஷ் மோதிரத்தை படம் எடுத்து ‘வாட்ஸ்-அப்’மூலம் நடிகர் விக்ரம் குடும்பத்தினருக்கு அனுப்பினார்.
படத்தை பார்த்தவுடன், அது அக்ஷிதாவின் வைர மோதிரம் தான் என அவர்கள் உறுதி செய்தனர். பின்னர் ஈ.சி.ஆரில் உள்ள முகவரியில் நகையை ஒப்படைத்துவிடுங்கள் என்றனர். அதன்படி நானும், எம்.எல்.ராஜேசும் வைர மோதிரத்தை நடிகர் விக்ரம் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம். என்னுடைய நேர்மையை பாராட்டி அவர்கள் வெகுமதி வழங்கினர்.நடிகர் விக்ரம் வீட்டில் இல்லை. அவர் செல்போனில் பேசி எனக்கு பாராட்டும், நன்றியும் கூறினார். விரைவில் நாம் சந்திப்போம் என்றும் கூறினார்.”என்றார்.