மசூதிகள், வக்பு வாரியம், சர்ச்சுகளையும் அரசு கையகப்படுத்த வேண்டும் - இந்து மக்கள் கட்சி கோரிக்கை

சனி, 19 ஜூலை 2014 (18:32 IST)
இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இந்து சமய திருக்கோயில்கள் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுவது போல, முஸ்லீம் மசூதிகள் மற்றும் வக்பு வாரியம், கிறிஸ்துவ சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்துவ சபைகளையும் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அர்ஜுன் சம்பத்தைத் தலைவராகக் கொண்ட இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 
 
இது தொடர்பாக அந்தக் கட்சியின் இளைஞரணி மாநில அமைப்பாளர் ஜெயம்" பாண்டியன், அமைப்புக் குழுவின் மாநிலச் செயலாளர் "கணபதி" ரவி  ஆகியோர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
 
மதச் சார்பற்ற அரசு என்று சொல்கின்ற தமிழக அரசு இந்து மத கோயில்களை மட்டும் தன் நிர்வாகத்தில் வைத்திருப்பது தமிழக இந்துக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். 
 
இந்துக் கோயில்களின் வருமானம் மற்றும் சொத்துகளின் நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை மூலம் மேற்கொள்வதால் கோயில் வருமானம் முழுக்கத் தமிழக அரசு கையகப்படுத்தி கஜானாவில் வைத்து அரசின் பிற திட்டங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது. 
 
இதன் காரணமாக இந்து கோயில்கள் வருமானத்தைக் கொண்டு இந்து சமயம் பரப்புதல், கல்விச் சேவை, அநாதை இல்லம், மருத்துவ சேவை போன்ற காரியங்களை செய்ய முடிவதில்லை. அரசும் இந்து சமய வளர்ச்சிக்கும் பிரச்சாரத்திற்கும் செலவிடுவது இல்லை. இதனால் இந்து சமய வளர்ச்சி, தமிழகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. 
 
கிறிஸ்துவ, இஸ்லாமிய மத நிறுவனங்களின் வருமானத்தில் அறநிலையத் துறை கைவைப்பது இல்லை. சர்ச், மசூதி, சொத்துகளின் வருமானம் அரசு சார்பற்ற வக்பு வாரியம், கிறிஸ்துவ சபைகளால் சுயேச்சையாக நிர்வாகம் செய்யப்படுகின்றன.
 
இதனால் கிறிஸ்துவ, முஸ்லீம்கள் கல்வி மற்றும் மருத்துவம் முலமாக மதப் பிரச்சாரம் செய்து கிறிஸ்துவ, முஸ்லீம் மதம் தமிழர்களிடையே வேகமாகப் பரப்பப்படுகிறது. தமிழர்களின் தாய்மதமான இந்து சமயம் அழிந்து வருகின்றது. 
 
எனவே இந்து சமயக் கோயில்களை அரசு மற்றும் அரசியல் சார்பற்ற இந்து சமய சான்றோர்கள் உள்ளடக்கிய சுயேச்சை அதிகாரம் பெற்ற அறவோர் வாரியத்தை அமைக்க வேண்டும். இல்லையேல் சர்ச், மசூதி சொத்துகளையும் அறநிலையத் துறை கையகப்படுத்த வேண்டும். இது விஷயத்தில் தமிழக முதல்வர் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
இவ்வாறு இந்து மக்கள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்