தேர்தல் தோல்வியால் மதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை - வைகோ
வியாழன், 7 ஜூலை 2016 (19:36 IST)
தேர்தல் தோல்விகள் மதிமுகவிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோவை வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தேர்தல் தோல்விகள் மதிமுகவிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அடுத்தக் கட்டமாக உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்தும், கழகத்தை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மாவட்டம் தோறும் செயல்வீரர் கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்று வரும் கொலை சம்பவங்களால் பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுமிகள் கூட பலாத்காரம் செய்யப்படும் நிலை இருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார். மேலும், மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக கடைகளின் நேரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், இதனை சாதகமாக பயன்படுத்தி ஆளும் கட்சியினர் சட்டவிரோதமாக மதுவகைகளை இரண்டு மடங்கு விலை வைத்து விற்பனை செய்து வருகிறது. ஆகவே, மதுவிலக்கு குறித்து தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும். இதுதொடர்பாக கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
படுகொலைகளும் விபத்துகளும் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறது. தமிழக காவல் துறையின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகி உள்ளது. இதனாலேயே விஷ்ணு பிரியா வழக்கு, ரூ.570 கோடி பிடிபட்ட வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குகளில் சிபிஐ உண்மையை வெளியே கொண்டு வரும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் நலக்கூட்டணி என்பது நிரந்தரமாக செயல்படும் அமைப்பு என தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலை மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் சேர்ந்தே சந்திக்கும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 19ஆம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.