குறைந்த வட்டியில் கைத்தறி நெசவாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

புதன், 4 மார்ச் 2015 (08:34 IST)
கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து  ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு சாதாரண காலங்களில் 20 சதவீதமும், விசேஷ காலங்களில் 30 சதவீதமும் அரசு மானியம் வழங்கப்படுகிறது.
 
30 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இந்த மானியத்தை அதிகரிக்க வேண்டும். மானியத்துக்கு உச்சவரம்பு நிர்ணயிக்காமல் விற்பனையாகும் ஆடைகளுக்கு முழு மானியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தமிழகத்தில் சுமார் 1,354 கூட்டுறவு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு 2012 மார்ச் முதல் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை அரசிடமிருந்து வர வேண்டிய ரூ.300 கோடி தள்ளுபடி மானியத் தொகை நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.
 
ஆண்டுதோறும் நடக்கும் கோ-ஆப்டெக்ஸ் துணிகளை கொள்முதல் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டங்களில் கைத்தறி துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். இதன் மூலம் கைத்தறி நெசவாளர்கள் பயனடைவார்கள்.
 
தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ வசதி, காப்பீடு, முதியோர் ஓய்வூதியத் திட்டம் போன்ற அனைத்து வசதிகளும் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அனைத்துக் கைத்தறி நெசவாளர்களுக்கும் கூட்டுறவு வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். வர்த்தக வங்கிகள் மூலம் மத்திய அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய கடனை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்