இயக்குநர் கௌதமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயனும்: எச்.ராஜா கொக்கரிப்பு!

சனி, 15 ஏப்ரல் 2017 (09:05 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் பெரிய அளவில் வெடிக்க ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தவர் இயக்குநர் கௌதமன். இந்நிலையில் இவர் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இயக்குநர் கௌதமன் தலைமையில் மாணவர் படை கடந்த வியாழன் கிழமை சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு சங்கிலியால் பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
 
திடீரென மின்னல் வேகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் போலீசாரே திணறினர். வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். போக்குவரத்து நெரிசல் உருவாகி ஸ்தம்பித்தது அந்த பகுதி.
 
30 நிமிடங்கள் நடைபெற்ற அந்த போராட்டத்தை போலீசார் தீவிர முயற்சியால் கலைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கௌதமன் உட்பட 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

 
இந்நிலையில் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இயக்குநர் கௌதமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவருக்கு சந்தேகிக்கும் படியாக உலகின் பல இடங்களில் இருந்து பணம் வருகிறது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்