கடந்த சில நாட்களாக திருவள்ளுவர் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும், தமிழகத்த்திலும் பெரும் வைரலாக மாறியுள்ளன. பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டது அனைத்து மக்களிடையேயும் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் இந்து சமய பற்றாளர்கள் திருவள்ளுவர் இந்து மதத்தை சார்ந்தவர் திராவிட கட்சியினர்தான் அவருக்கு வெள்ளை உடுப்பு அணிவித்தனர் என்று வாதிட, மறுபக்கம் திராவிட கட்சியினர் திருவள்ளுவரை வைத்து பாஜகவினர் அரசியல் செய்ய முயல்கிறார்கள் என வாதிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திருவள்ளுவர் இந்துதான் என்பதற்கு பூர்ணலிங்கம் பிள்ளை என்பவர் செய்த ஆய்வை முன்னுதாரணமாக காட்டியுள்ளார். மேலும் பிராமணியத்தை பெரிதும் விமர்சித்து வந்தவரான பூர்ணலிங்கம் பிள்ளையே திருவள்ளுவரின் குறள்களை ஆராய்ந்து அவர் இந்துதான், சமணர் அல்ல என்று கூறியிருப்பதாய விக்கிப்பீடியாவில் உள்ள தகவலை மேற்கோள் காட்டியுள்ளார்.
மேலும் பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் சிலரும் திருவள்ளுவர் இந்துவாகதான் இருந்திருப்பார் என்பதற்கான ஆதாரங்களை தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் யாருமே அவர் எப்படி இருந்தார் என்பது குறித்து பதிவு செய்யவில்லை என்றும், திருவள்ளுவர் என்ற பெயரே தொல்காப்பியருக்கு வைக்கப்பட்டது போன்றதான புனைவான பெயர்தான் என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.