எச்.ராஜா காந்தியை கொன்ற கோட்சே கும்பலைச் சேர்ந்தவர் - கி.வீரமணி தாக்கு

செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (19:09 IST)
காந்தியாரைக் கொன்ற கோட்சே கும்பலைச் சேர்ந்தவர்களிடம் அரசியல் நாகரிகத்தை எதிர்பார்ப்பது நியாயமில்லைதான் என்று எச்.ராஜாவின் வன்முறைப் பேச்சு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை எம்.பி-யுமான டி.ராஜாவின் மகள் குறித்து கடந்த சனிக்கிழமை பாஜக தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா, சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியிருந்தார்.
 
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவின் மகள் இந்தியாவை உடைப்போம் என்று கோசம் போட்டிருக்கிறார். இப்படி என் மகள் கோசம் போட்டால் அவளை நான் சுட்டுக் கொன்றிருப்பேன்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் எப்போதும் நாத்துடுக்குடனும், ஆபாச அருவருப்புகளையே தனது வாயிலிருந்து ஆணவத்தோடும் வெளியிடும் ஒரு நபர் - பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா.
 
முன்பே பல முறை அவதூறு விளைவிக்கும் சட்ட விரோதப் பேச்சுகளை பகிரங்கமாகப் பேசியதைக் குறித்து, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி போன்ற அமைப்புகள், காவல் துறையிடம் புகார் கொடுத்தும், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க ஏனோ, தமிழ்நாடு காவல்துறை தயக்கம் காட்டி வருகிறது!
 
அதே நபர், இன்று தன்னை மிகப் பெரிய ‘24 கேரட் தேச பக்த திலகமாக’ எண்ணிக் கொண்டு, ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர் போராட்டங்கள் குறித்து, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் டி.ராஜா அவர்களின் மகள் குறித்து பகிரங்கமாக வன்முறைப் பேச்சு பேசியுள்ளார்.
 
“டி.ராஜா அவர் மகளைத் துப்பாக்கியில் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் என்பது, ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியாக உள்ளவர் பேசும் பேச்சு என்றால், அவருக்கு உள்ள பின்புலம் என்ன? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
 
தரமான விமர்சனங்கள் செய்வதுதானே அரசியல் நாகரிகம்? காந்தியாரைக் கொன்ற கோட்சே கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இதை எதிர்பார்ப்பது நியாயமில்லைதான். என்றாலும் சட்டம் வேடிக்கை பார்க்கலாமா?
 
திராவிடர் கழகம் வன்மையாக இதனைக் கண்டிக்கிறது. மற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் தமிழக காவல்துறை, இந்த வன்முறைப் பேச்சுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டாமா?” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்