தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வரும், டெல்லி சிபிஐ காவல்துறையினர், புகாரில் சிக்கிய மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன், சுகாதரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு அவர்களுக்கு, எதிராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
ஏற்கனவே உள்ள 6 பேருடன் கூடுதலாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, விஜயபாஸ்ககர், சென்னை காவல்துறை முன்னாள் காவல் ஆணையாளர் ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வணிகவரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த வி.எஸ்.குறிஞ்சி செல்வன் உள்ளிட்ட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது
இந்நிலையில் இந்த வழக்கு எம்.பி.எம்.எல்.ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ வழக்கறிஞர் குற்றப்பத்திரிக்கை நகலை தாக்கல் செய்தார். சுமார் 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையுடன் ஆவணங்களை சேர்த்து 20,000 பக்கங்கள் தாக்கல் செய்யப்பட்டது.