தொலைபேசி இணைப்பு முறைகேடு: ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் - தயாநிதி மாறன் சவால்

ஞாயிறு, 25 ஜனவரி 2015 (15:48 IST)
முறைகேடாக தொலைபேசி இணைப்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
முறைகேடாக தொலைபேசி இணைப்பு பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச்௦செயலாளர் கவுதமன் மற்றும் சன் டிவி நிறுவன ஊழியர்கள் இருவரை சிபிஐ காவல்துறையினர் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
 
இதுகுறித்து கூறிய தயாநிதி மாறன், ‘தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள அறிவுஜீவு ஒருவரை திருப்திப்படுத்தவே சிபிஐ இப்படி செய்கிறது’ என்று ஆடிட்டர் குருமூர்த்தியை மறைமுகமாக கூறினார். இதற்கு பதிலளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, ‘இந்த வழக்கு தொடர்பாக என் மீது மான நஷ்ட வழக்கு போடுவதாக கூறிய தயாநிதி மாறன் ஏன் அப்படி செய்யவில்லை என்றும் இவ்வழக்கு தொடர்பாக வெளிப்படையான விவாதத்துக்கு தயாநிதி மாறன் தயாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.
 
குருமூர்த்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மேலும் அடுத்த பக்கம்...

ஆடிட்டர் குருமூர்த்தி தொடர்ந்து என் மீது கேள்வி அம்புகளை தொடுத்து வருகிறார். வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது மான நஷ்ட வழக்கு போடுவது பயன் தராது என்பது அவருக்கு தெரியாதா? மேலும் நேரடி விவாதத்துக்கு தயாரா என்று கேட்டுள்ளார். நான் அவரை சந்தித்து விவாதிக்கத் தயார். அதற்கு முன்பு அவர் எனது இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு இடத்தையும் நேரத்தையும் சொல்லட்டும்.
 
ஒரு ISDN PRI (Integrated Service Digital Network Primary Rate Interface) இணைப்பின் மூலம் ஒரே சமயத்தில் அவர் சொல்வதுபோல் 300 தொலைபேசி எண்களை இயக்கிக் காட்டுவாரா? அது சாத்தியம் என்று நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகுகிறேன். அடுத்து, அவர் சொல்வதுபோல் ரூ.400 கோடி அளவில் தொலைபேசி பயன்படுத்தப்பட்டிருந்தால், அதற்கான மீட்டர்கள் இணைப்பகங்களில் இருந்திருக்குமே, அதற்கான ரீடிங்கை அவர் காட்டட்டும். இந்த இரண்டையும் நிரூபித்துவிட்டு விவாதத்துக்கு தேதியும் இடத்தையும் அவர் குறிப்பிடட்டும்.
 
என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
 
முன்னதாக தயாநிதி மாறன் சிபிஐ இயக்குநர் அனில்குமார் சின்ஹாவுக்கு கடந்த 22 ஆம் தேதி அனுப்பியிருந்த கடிதத்தில் “நான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தபோது தொலைபேசி இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், எனக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், என் மீது இந்த வழக்குப்பதிவு செய்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் எனக்கு எதிராக பொய்யான வாக்குமூலத்தை பெறும் நோக்கில், எனது முன்னாள் கூடுதல் தனிச்செயலாளர் கவுதமன் மற்றும் இரு சன் டிவி நிறுவன ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்